கேள்வி: SC மக்களை ஒடுக்கியவர்கள் தானே BC+MBC மக்கள். இவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு?
பதில்:
BC+MBC மக்கள் என்றால்
சின்னக் கவுண்டர் படத்தில் வருகிற விஜயகாந்த்,
எஜமான் படத்தில் வருகிற ரஜினி,
மறுமலர்ச்சி படத்தில் வருகிற மம்முட்டி,
தேவர் மகன் படத்தில் வருகிற கமல்
போல் பண்ணையார்கள் மட்டும் தானா?
5 முறை முதல்வர் ஆன பிறகும் சாதியின் காரணமாக இழிவு படுத்தப்படுகிறாரே கலைஞர்.. அவரும் ஒரு MBC தான்.
துணிகளை வெளுக்கிறவர்கள், முடி திருத்துகிறவர்கள் எல்லாம் MBC தான்.
1900கள் வரைக்கும் கூட கோயிலுக்கும் எட்டிப் பார்க்க முடியாமல் போராட்டம் நடத்தினார்களே நாடார்கள்.. அவர்களும் BC தான்.
மாருக்குச் சேலை அணிய உரிமை இன்றி இருந்தார்களே.. அவர்களும் BC/MBC தான்.
குற்றப் பரம்பரை என்று வேட்டை ஆடப்பட்டார்களே.. அவர்களுக்குப் பெயர் சீர் மரபினர் (Denotified communities). அவர்களும் MBC ஒதுக்கீட்டில் வருகிறார்கள்.
உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன் பிடிக்கிறார்களே! அவர்களும் MBC தான்.
ஊசி பாசி விற்றுப் பிழைக்கிறார்களே… அவர்களும் MBC தான்.
காட்டிலும் மேட்டிலும் வயலிலும் வேர்வை சிந்த உழைக்கிறார்களே.. அவர்களும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான்.
யாரும் நாம் பிறந்த சாதியைத் தேர்ந்து எடுப்பதில்லை.
My birth is a fatal accident என்றார் ரோகித் வெமுலா.
சாதி ஒரு விபத்து.
அந்த விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் கொடு, காயம் அடைந்தவர்களுக்கு எதுவும் தராதே என்று கேட்க முடியுமா?
இப்போதும் சாதியால் அதிகம் பாதிக்கப்பட்ட SC மக்கள் மற்றும் வாய்ப்புகள் குறைந்த ST மக்களுக்குத் தான் அவர்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப கிட்டத்தட்ட 100% இட ஒதுக்கீடு தரப்படுகிறது.
வேறு எந்தப் பிரிவுக்கும் தரப்படுவதில்லை.
SC மக்களிலேயே ஒரு சாதி இன்னொரு சாதியை ஒடுக்குகிறது என்கிறார்கள். அதற்காக பிற SC மக்களுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று வாதிட முடியுமா?
சாதி படி நிலை அமைப்பு கொண்டது.
ஒவ்வொரு சாதியும் தனக்கு மேல் உள்ள சாதியால் ஒடுக்கப்படுகிறது.
கீழ் உள்ள சாதியை ஒடுக்குகிறது.
ஒடுக்கு முறையின் தன்மை மாறுகிறது. ஆனால், ஒடுக்கப்படுவது உண்மை.
எந்தச் சாதி இன்னொரு சாதியை ஒடுக்குகிறது என்பதை விட எல்லோருமே சாதி என்னும் அமைப்பு முறையால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது தான் உண்மை.
பிறப்பின் காரணமாக குறிப்பிட்ட தொழிலைச் செய்யப் பணிக்கப்பட்ட அனைவருமே சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் தாம்.
என் அம்மா பள்ளிக்கே போகாமல் மாடு மேய்த்த போது, கமலா ஹாரிஸ் அம்மா அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
இது இந்த சாதி முறை என் அம்மாவுக்குச் செய்த துரோகம் இல்லையா?
சாதி மாறி திருமணம் செய்த ஆணின் உயிர் கொல்லப்படும் இடத்தில் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் சேர்த்து தான் போகிறது.
உயிர் பெரிதா வாழ்க்கை பெரிதா என்று கேட்க முடியுமா?
எல்லோரும் முன்னேற வேண்டும் என்று நினைத்த திராவிடத்தால் தான்,
இன்று தமிழ்நாட்டிலே வாழ்கிற SC மக்கள் நிலை மற்ற மாநிலங்களை ஒப்பிட சிறப்பாக உள்ளது.
நான் மட்டும் முன்னேற வேண்டும் அடுத்தவர் முன்னேறக் கூடாது என்று நினைத்தால்,
ஓரளவுக்கு மேல் உங்கள் முன்னேற்றம் அமையாது.
ஏன் என்றால்,
சாதியின் Design அப்படி.
பார்க்க – முகநூல் உரையாடல்