கேள்வி: முன்னேறிய சாதிகளில் ஏழைகளே இல்லையா? எனக்குத் தெரிந்த ஒரு அர்ச்சகர் மகள் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
பதில்:
அந்த அர்ச்சகர் மகளாவது மருத்துவப் படிப்பு கிடைக்காமல் வேறு ஏதாவது கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருப்பார்.
ஆனால், எங்கள் அப்பத்தா, அமத்தா, அம்மா, பெரியம்மா, சித்திகள், அத்தைகள் யாரும் பள்ளிக்கூடத்திற்கே அனுப்பி வைக்கப்படவில்லை.
போவியா அங்கிட்டு!
இட ஒதுக்கீடு என்று வரும் போது எல்லாம் இப்படி குதர்க்கமான ஒப்பீடுகள் மூலமாகத் தான் குழப்பி விடுவார்கள்.
SC, ST, BC, MBC என்று சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டோரில் பெரும்பாலானோர் ஏழைகள். முதல் தலைமுறையாக கல்லூரிப் படிப்புக்குச் செல்பவர்கள். ஆனால், மூன்று தலைமுறையாகப் படித்துக் கொண்டு வரும் யாராவது ஒரு ஆசிரியர், வங்கி ஊழியர் பிள்ளையைக் காட்டி இட ஒதுக்கீடு தேவையா என்பார்கள்?
முன்னேறிய FC பிரிவினரோ 2000 ஆண்டுகளாகப் படித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் பெரும் பணக்காரர்கள். பல தலைமுறைகளாக நோகாத வேலைகள் பார்ப்பவர்கள். ஆனால், ஒரே ஒரு அர்ச்சகர் மகளைக் காட்டி அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று குழப்புவார்கள்.
எல்லா சாதிகளிலும் ஏழைகள், போட்டியில் பின்தங்குவோர் உண்டு. 125 கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவக் கல்லூரிப் படிப்பையும் அரசு வேலையையும் உறுதி செய்வது இயலாத காரியம்.
குறிப்பிட்ட சில சமூகங்களின் பிடியில் அதிகாரம் குவியாமல், அனைத்துப் பிரிவினருக்கும் உரிமையை உறுதி செய்வது தான் இட ஒதுக்கீடு.
பார்க்க… முகநூல் உரையாடல்