கேள்வி: மக்களுக்கு இலவசங்களாக அள்ளிக் கொடுத்தால் அவர்கள் சோம்பேறிகளாக மாட்டார்களா?
பதில்: இல்லை.
இத்தனை நாள் அவர்களுக்குக் குறைந்த கூலிகளைக் கொடுத்து வந்தவர்கள் தான் மக்கள் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
Universal basic income என்ற ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, ஒரு அரசு தன் குடிமக்கள் அனைவருக்கும் ஒரு குறைந்தபட்ச தொகையை மாதா மாதம் இலவசமாக அளிக்க வேண்டும்.
இதைப் பின்லாந்து, நெதர்லாந்து, கனடா போன்ற பல நாடுகள் ஆய்வு செய்து பார்த்ததன் அடிப்படையில் இப்படி இலவசமாகப் பணத்தைக் கொடுப்பதால் மக்கள் யாரும் சோம்பேறிகள் ஆக மாட்டார்கள் என்கிறார்கள்.
ஏன் என்றால்,
டிவியும் மிக்சியும் கிரைண்டரும் கிடைத்து விட்டது என்று யாராவது வீட்டில் படுத்துத் தூங்க முடியுமா? கல்விக்கும் மருத்துவத்துக்கும் மட்டும் தானா இங்கு செலவு ஆகிறது? ஒரு ஏழையின் திருமணத்துக்குக் கூட இங்கு எத்தனை பவுன் நகை தேவைப்படுகிறது? இதற்கு எல்லாம் அரசா பொறுப்பு? மக்கள் இதை ஈட்ட ஓட மாட்டார்களா?
நீங்களும் நானும் ஒரு பாடகராகவோ எழுத்தாளராகவோ அரசியல்வாதியாகவோ நாம் விரும்பிய ஏதோ ஒரு துறையில் நுழைந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாதமும் பிழைப்புக்காக ஓடுகிற வாழ்க்கையில் அது சாத்தியப்படுவதில்லை.
பணம் ஒரு பிரச்சினை இல்லை என்றால் நீங்கள் சோம்பேறி ஆக மாட்டீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யத் தொடங்குவீர்கள்.