கேள்வி: நீட் போன்ற கொடுமைகளில் இருந்து விடுபட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு தரலாமா?
பதில்:
முதலில், இப்படி ஒரு சட்டம் நீதிமன்றத்தில் நிற்காது!
இரண்டாவது, வசதி வாய்ப்புள்ள எல்லோரும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்து விட்டுக் கூடுதலாக தனியார் பயிற்சிக்கும் அனுப்பி வைத்து இந்த இடங்களை அபகரிக்கத் தொடங்குவார்கள்.
நாம் எதற்காக கொண்டு வருகிறோமோ அந்த நோக்கம் நிறைவேறாது.
இது இன்னொரு அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது!
யார் யாருக்கு
அல்லது
எந்த அடிப்படைகளில் இட ஒதுக்கீடு வழங்கலாம்?
என்னுடைய இன்றைய புரிதலின் அடிப்படையிலான கருத்து:
ஒருவர் எதன் பெயரில் அநீதி அல்லது துயரத்திற்கு உள்ளாகி இருக்கிறாரோ அதன் பொருட்டு இட ஒதுக்கீடு வழங்கலாம். அந்த அடிப்படை என்பது ஒருவர் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கக் கூடாது.
அதாவது,
இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்காக யாரும் கைம்பெண் ஆக மாட்டார்கள். கை காலை உடைத்துக் கொள்ளவோ கண் பார்வையை இழக்கவோ மாட்டார்கள்.
ஆண் பெண்ணாக முடியாது. ஒரு சாதி இன்னொரு சாதியாக முடியாது.
இப்படி மோசடிக்கு இடமில்லாத வகையிலும், வரலாற்று நோக்கிலும் சமூகப் பார்வையிலும்,
ஒரு குழுவாக,
அநீதி இழைக்கப்பட்டவராகவும் அதனால் பின்தங்கியவராகவும் அரசு என்ன முயற்சி செய்தாலும் உடனடியாக அவரது நிலையை மாற்றுவதற்கு எந்த வழியும் இல்லாத போது இட ஒதுக்கீடு வழங்கலாம்.
அரசு தன் தோல்வியை மறைப்பதற்காக கண் துடைப்பு போல் அடையாள நோக்கில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
அரசு தன்னுடைய சக்திக்கு உட்பட்டு அனைவருக்கும் ஒரு சீரான கல்வி வழங்கிய பிறகும் நுழைவுத் தேர்வின் காரணமாக சிலர் பின்தங்குகிறார்கள் என்றால்,
தடையாக இருக்கும் நுழைவுத் தேர்வைத் தான் ஒழிக்க வேண்டுமே ஒழிய இட ஒதுக்கீடு தீர்வு ஆகாது.
அதே வேளை, மத்திய அரசு வேலைகளில் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழ் வழியத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு போன்றவற்றை
அரசியல் நீதி தொடர்பான இட ஒதுக்கீடாகவே பார்க்கிறேன். அதனைச் சமூக நீதியாகக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
Reservation should be given to people for who they are; not for what they can become.
பார்க்க… முகநூல் உரையாடல்