கத்தார் என்று ஒரு அரபு நாடு இருக்கிறது.
ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய GDP அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பணக்கார நாடு இது தான்.
இதன் பரப்பளவு தமிழ்நாட்டைக் காட்டிலும் 11 மடங்கு குறைவு.
335 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை வெளிநாடுகளில் மட்டும் முதலீடு செய்துள்ளது.
இந்த நாட்டில் வருமான வரி இல்லை.
வெளிநாட்டில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் கூட மருத்துவம் கிட்டத்தட்ட இலவசம்.
இந்த நாட்டை Black Panther படத்தில் வருகிற வக்காண்டா நாடு போன்ற ஒரு மாய உலகம் என்றே நண்பர்களிடம் குறிப்பிடுவேன்.
எப்படிச் சாத்தியமானது இந்த வளம்?
இந்தக் குட்டி நாடு உலகின் மொத்த இயற்கை எரிவாயுவில் 13%ஐ தன் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கிறது.
ஆனால், எரிவாயு எல்லாம் விற்பனைச் சரக்காகி காசு பார்த்த 20ஆம் நூற்றாண்டு வரை இது ஒரு ஏழை நாடே.
ஒரு நாடு ஏழையாக உள்ளதா பணக்காரனாக உள்ளதா என்பதை வரலாறும் புவியியலும் தீர்மானிக்கிறது.
தங்கள் மண்ணுக்குள் வளம் இருப்பது புவியியல் அவர்களுக்குத் தந்த லாட்டரி.
அந்த நாட்டில் 21ஆம் நூற்றாண்டில் பிறந்து இந்த வளத்தை எல்லாம் அனுபவிப்பது காலமும் வரலாறும் அவர்களுக்குத் தந்த லாட்டரி.
இந்த நாட்டின் அரசருக்கு மக்களுக்கு நல்லது செய்யும் மனது இருப்பது உண்மை. ஆனால், அப்படி மனம் உள்ள தலைவருக்கும் இந்த வளங்கள் தான் கைகொடுக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்தியா ஒரு ஏழை நாடு.
தமிழ்நாடு ஒரு ஏழை மாநிலம்.
7 கோடி மக்களும் மிகுந்த நெருக்கமான மக்கள் தொகை அடர்த்தியும் கொண்டிருக்கிறோம்.
மண்ணுக்குள் வைரமும் எரிபொருட்களும் உறங்கிக் கொண்டிருப்பது போல்,
வரலாறு நமக்கு அளவில்லாமல் தந்திருக்கிற ஒரே கொடை மக்கள் வளம் மட்டும் தான்.
அந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தான் நம்முடைய மாநிலத்தை முன்னேற்ற ஒரே வழி.
இதனை உணர்ந்து மக்கள் நலத் திட்டங்களில் செலவிட்டு நம்மைச் சத்தான உடம்புடனும் கல்வியுடனும் ஆளாக்கிய நம் தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.
உங்கள் குழந்தைகள் வளர்ந்த நாட்டில் வாழப் போகிறார்களா இல்லை சாதி, மதம், மொழி, இனம் என்று அடித்துக் கொண்டு சாகப் போகிறார்களா என்பதை,
நீங்கள் பேசும் அரசியல் தான் தீர்மானிக்கும்.
**
ஒரு வளர்ந்த நாட்டின் நூலகம் எப்படி இருக்கும்? வீடியோ பாருங்கள். இதையெல்லாம் ஒப்பிட, எத்தனையோ சிரமங்களுக்கு இடையே வளர்ந்த நாட்டுக்கு இணையாக கலைஞர் கட்டிய அண்ணா நூலகம் மிகவும் பாராட்டுக்குரியது.
இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? தற்காலிகமாக, நான் கத்தாரில் தான் வாழ்கிறேன்