கேள்வி: திராவிட இயக்கம் தமிழ் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் என்ன?
பதில்:
1900-களுக்கு முன் இருந்த ‘மதறாஸ் மாகாணம்’ எழுத்தறிவற்றவர்களையும் நோயாளிகளையும் அதிக எண்ணிக்கையில் கொண்டது. தமிழர்கள் தங்களுடைய இலக்கியச் சொத்துகளைப் பற்றிய எண்ணமே இல்லாமல் சுணங்கியிருந்தனர். பழந்தமிழ் இலக்கியங்களும் ஏடுகளும் தனியாரிடம் தூங்கிக்கொண்டிருந்தன.
தமிழ்த் தாயும் திருவள்ளுவரும் வரலாற்றின் பழைய ஏடுகளில் பதுங்கியிருந்தனர். செம்மொழி தமிழ் என்பதும் உலகிலேயே மிகவும் மூத்த நாகரிகங்களுள் ஒன்று திராவிடர்களுடையது என்பதும் தெரியாமல் மௌடீகம் நிலவியது. சுயமரியாதை இயக்கம் வளர்ந்து நீதிக் கட்சியையும் உள்ளடக்கி திராவிடர் கழகமானபோது, கலாச்சாரரீதியாக தமிழ் மறுமலர்ச்சிக்கு உழைத்தனர். பிற மொழி கலவாமல் தமிழில் பேசும், எழுதும் தனித்தமிழ்ப் போக்கு உச்சம் நோக்கி நகர்ந்தது. சம்ஸ்கிருதப் பெயர்களைத் தவிர்த்து தூய தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டினர்.
நீதி தவறியதை அறிந்ததும் உயிரைத் துறந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை ஏராளமானோர் சூட்டிக்கொண்டது இதில் கவனிக்கத்தக்கது. சமூகரீதியாகப் பிளவுபட்டிருந்த மக்கள், ‘தமிழர்’ என்ற ஒற்றுமை உணர்வால் மாநிலமே ஒன்றுபட்ட பிரதேசமாகிவிட்டது என்று 1979-ல் குறிப்பிட்டார் அறிஞர் பிராஸ்.
– பிரேர்ணா சிங் எழுதிய தமிழ்நாட்டின் துணை தேசியவாதம் எப்படி சமூக நலனை வளர்த்தெடுத்தது? என்ற கட்டுரையில் இருந்து. நன்றி: இந்து தமிழ் திசை.
பார்க்க – முகநூல் உரையாடல்