திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இங்கே கூப்பாடு போடும் சங்கிகளுக்கும் தமிழ்தேசிய தம்பிகளுக்கும் தலித்தியம் பேசுபவர்களுக்கும் என் நண்பனின் வட இந்திய அனுபவத்தை கூறிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்.
என் நண்பன் பிறந்ததிலிருந்து தமிழகத்தில் வளர்ந்தவன். பட்ட மேற்படிப்பு சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்று சமார் 30 ஆண்டுகள் தமிழகத்தில் படித்துவிட்டு பயிற்சிக்காக வட இந்தியாவில் கடந்த 6 மாதமாக தங்கியுள்ளான்.
அவன் என்னிடம் சொன்னது நாமெல்லாம் தமிழ்நாட்டில் சுகமா வாழ்ந்துட்டு கஷ்டம்னா என்னன்னே தெரியாம இருந்திருக்கோம். ஆனா இங்கே நிலைமை வேற மாதிரி இருக்கு.
அவன் வேலை பார்க்கும் மருத்துவமனை மருத்துவம் பார்க்க வருபவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனராம். பணக்காரர்கள். ஏழைகள். ஏழைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். அவர்களை அங்கே உள்ள மருத்துவர்கள் அணுகும் விதமே அருவருப்பாக உள்ளதாம். பெரும்பாலும் அங்குள்ள மருத்துவர்கள் உயர்சாதியினர் என்பது தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் மருத்துவ சேவைக்காக மருத்துவமனை வரும்போது தலைகுனிந்து இருகரம் மேலெழுப்பி கெஞ்சிய படியே மருத்துவர் அறைக்குள் நுழைவார்கள். அவர்களை ஏறெடுத்தும் உயர்சாதி மருத்துவர்கள் பார்ப்பதில்லை. அப்படி வரும் Below poverty line என சொல்லப்படும் ஏழைகளை அவர்கள் ஒரு பொருட்டாகவோ, ஒரு மனிதனாகவோ கூட மதிக்காமல் மிகவும் கீழ்தரமாக நடத்துகிறார்கள். முகத்திற்கு நேராக அவர்களின் நோய் குறிப்புகளை தூக்கி வீசுவதும், நீங்க எல்லாம் ஏன் இங்க வரீங்க?? இது உங்களுக்கான இடம் இல்லை என்பது போன்ற வசவ சொற்களையும் தொடர்ந்து அவர்கள் மீது சாதிய வன்மம் கொண்டு தாக்குதல் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை இதுவரை அவன் பார்த்ததில்லை.
இதைப்பார்த்து அவனால் அங்கே தொடர்ந்து பணியாற்ற முடியாமல் மறுபடியும் தமிழகத்திற்கு வர முடிவு செய்துள்ளான். அவன் பேசிய பிறகே நான் உணர்ந்தேன் என்னுடைய மருத்துவமனைக்கு வரும் வட இந்தியர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒரு BP பார்ப்பதற்காக அவர்கள் கையை நான் தொடும் பொழுது மிகவும் சங்கோஜமாக உணர்கிறார்கள். அதன் காரணம் வட இந்திய மருத்துவர்கள் அவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்தியுள்ளனர் அந்த உலகியல் சிக்கலிலிருந்து அவர்களால் மீளமுடியாமல் தான் நான் அவர்கள் கையை தொடும் போது ஒருவித சங்கோஜத்துடன் விலகுகிறார்கள் என்று.
அவன் என்னிடம் சொன்னது இதுதான். ஆறு மாத காலமாக நான் இங்கே வந்தபிறகுதான் பெரியாரின் உழைப்பையும் திராவிட இயக்கத்தின் தேவையும் அதிகமாக உணர்ந்திருக்கிறேன் என்று. இத்தனைக்கும் அவன் ஒரு பெரியாரியவாதி கிடையாது. அரசியல் சார்பற்ற பொது மக்களில் ஒருவன்.
திராவிட இயக்கம் சாதி மறுப்பிலும் சமத்துவ சமுதாயம் உருவாக்குவதிலும் இன்னும் செல்லவேண்டிய தூரம் அதிகமுள்ளது. அதேசமயம் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்தையும் இந்த இயக்கத்தால் விளைந்த பயனையும் குறைத்து மதிப்பிடாமல் உண்மையை உணருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எழுதியவர்: மருத்துவர் சாய் லட்சுமிகாந்த்