கேள்வி: திராவிடக் கட்சிகள் ஏன் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை?
பதில்:
நீங்கள் சொல்வது பொய்.
திராவிடக் கட்சிகள் பல தலித் வேட்பாளர்களைப் பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
பெயர்களில் உள்ள சாதியை ஒழித்தது திராவிட இயக்கம் என்பதால்,
இங்கு தான் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன சாதி என்றே பலருக்கும் தெரியாது.
அப்படியே தெரிந்தாலும், கட்சி பார்த்துத் தான் வாக்களிக்கிறார்கள்.
தனித்தொகுதியில் நிறுத்தப்படும் வேட்பாளர்களைக்கூட SC/ST என்று தான் தெரிந்து வைத்திருக்கிறார்களே ஒழிய,
அவர்கள் குறிப்பாக என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில்லை.
ஆம், ஒரு சிறுபான்மை வாக்காளர்கள் சாதி பார்த்துத் தான் வாக்களிக்கிறார்கள். அதனால் தான் 1% வேறுபாட்டில் கூட வெற்றி கை விட்டுப் போகிறது.
இது நியாமாரே என்றால் நியாயம் இல்லை தான்.
இந்த சாதியாதிக்கச் சுழலில் சிக்கிச் சீரழியக்கூடாது என்று தான்
அரசியல் சாசனம் தனித்தொகுதிகள் என்ற இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தி ஒடுக்கப்பட்டவர்களின் குரல் சட்டம் இயற்றும் மன்றங்களில் ஒலிப்பதை உறுதி செய்கிறது.
அதாவது எங்கள் தொகுதி MLA என்ன சாதி, உங்கள் தொகுதி MP என்ன சாதி என்பது முக்கியம் இல்லை.
சட்டம் இயற்றும் மன்றங்களில் அனைத்துப் பிரிவினருக்கும் போதுமான பிரதிநிதித்துவம் அமைய வேண்டும்.
சாதி ஆதிக்கம் நோய். அதற்கான தடுப்பூசியான இட ஒதுக்கீட்டை நாடு பிறந்த போதே போட்டு விட்டார்கள்.
திராவிடக் கட்சிகள் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை; ஆகவே, அவை தலித் விரோதக் கட்சி என்கிறார்கள்.
இதே Logicல் போலி தலித்திய வாதக் கட்சிகளிலுமே ஆண்களே நிறைந்திருக்கிறார்களே! இந்தக் கட்சிகள் எல்லாம் பெண் விரோதக் கட்சிகளா?
பெண்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டுவோர் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அல்லவா கேட்க வேண்டும்?
மாறாக, பெண்களுக்குத் தனியாக கட்சி காண்போம், பெண்கள் எல்லாரும் அதற்கு மட்டும் வாக்களியுங்கள் என்று கோருவது, போகாத ஊருக்கு வழி காட்டுவது இல்லையா?
நீங்கள் ஆதிக்க வலு உள்ளவர்களாகச் சொல்லும் கவுண்டர்கள், வன்னியர்கள், தேவர்கள் முதலிய இடைநிலைச் சாதியினர் கூட யாராவது தனிக்கட்சி கண்டு வென்றுள்ளார்களா?
பிறகு ஏன் தலித்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறீர்கள்?
இது சமூகத்தைத் தலித் எதிர் தலித் அல்லாதவர்கள் என்று இருமுனைப்படுத்தி அவர்களை மேலும் தனிமைப்படுத்தி ஆபத்துக்குள்ளாக்கும் என்பதை உணர்கிறீர்களா இல்லையா?
எனவே, இனிமேலும் இந்தக் கேள்வியை யாராவது கேள்வி கேட்டால், திமுகவில் எத்தனை மாவட்டச் செயலாளர்கள், MLAகள் என்று கணக்கெடுத்துக் கொண்டிருக்காமல்,
பொதுத் தொகுதியில் ஏன் பொது வேட்பாளர்கள் வெல்லக்கூடாது என்று திருப்பிக் கேளுங்கள்!
உண்மையிலேயே, தலித்களுக்குக் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்றால், அவர்கள் அனைத்து முன்னணிக் கட்சிகளிலும் இணைந்து, எந்தக் கட்சி வென்றாலும் தங்களின் நலன் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வதே ஒரே வழி!
பார்க்க… முகநூல் உரையாடல்