தமிழ்நாடு, திராவிட இயக்கம் என்றால், துணை தேசியத்தின் வழியே அவர்கள் அடைந்த வளர்ச்சியே என் நினைவில் இருக்கும். இந்தியாவுக்கான பாடமும் இதில் உண்டு!
– பிரேர்ணா சிங், How Solidarity Works for Welfare: Subnationalism and Social Development in India என்ற நூலில். Cambrdige பல்கலைக்கழக வெளியீடு.
இந்தியாவில் சமூக நல மேம்பாடு தொடர்பான என்னுடைய ஆய்வுகளின் வாயிலாகவே தமிழ்நாட்டு அரசியல் என்னை வெகுவாக ஈர்க்கத் தொடங்கியது. தென்னிந்திய மாநிலங்களான கேரளம், தமிழ்நாடு இரண்டும் சமூக நலத் திட்டங்கள் மூலம் அடைந்துள்ள வளர்ச்சி உலக அளவில் கவனிக்கத்தக்க சாதனைகள். தேசிய உணர்வைவிட துணை தேசிய உணர்வு – அதாவது, பிராந்திய அடையாள உணர்வு இந்த வளர்ச்சியின் மிக முக்கிய மான காரணிகளில் ஒன்றாகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாட்டின் பிற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடும் பின்தங்கி இருந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சி வரலாற்றை 1900-க்கு முன்பு, 1900 – 1940, 1950 – 1960, 1970-களுக்குப் பின் என்று நான்கு காலகட்டங்களாகப் பிரித்து ஆராயலாம். 1900-களுக்கு முன் இருந்த ‘மதறாஸ் மாகாணம்’ எழுத்தறிவற்றவர்களையும் நோயாளிகளையும் அதிக எண்ணிக்கையில் கொண்டது. தமிழர்கள் தங்களுடைய இலக்கியச் சொத்துகளைப் பற்றிய எண்ணமே இல்லாமல் சுணங்கியிருந்தனர். பழந்தமிழ் இலக்கியங்களும் ஏடுகளும் தனியாரிடம் தூங்கிக்கொண்டிருந்தன.
தமிழ்த் தாயும் திருவள்ளுவரும் வரலாற்றின் பழைய ஏடுகளில் பதுங்கியிருந்தனர். செம்மொழி தமிழ் என்பதும் உலகிலேயே மிகவும் மூத்த நாகரிகங்களுள் ஒன்று திராவிடர்களுடையது என்பதும் தெரியாமல் மௌடீகம் நிலவியது. கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சியிலும் இதே நிலைதான். அந்நாட்களில் மதறாஸ் மாகாண மக்களின் சராசரி ஆயுள் காலம் 23 வயது!
1891 மக்கள்தொகை அறிக்கை, படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் சாதிக்காரர்கள் என்று அடையாளம் கண்டது. அவர்களிலும் அதிகம் பேர் பிராமணர்கள். பிராமணரல்லாதோர் இயக்கமாக உருவெடுத்த நீதிக் கட்சி கல்வி, சுகாதாரத் துறையில் முன்னேற்றப் பாதை நோக்கி மதறாஸ் மாகாணத்தைத் திருப்பியது. பனகல் அரசர் தலைமையிலான நீதிக் கட்சி ஆட்சி, பிராமணர் அல்லாத சமூகத்தவர்களுக்கான கல்வி, சுகாதாரத்தை இலவசமாக்குவதில் முனைப்பு காட்டியதோடு வேலைவாய்ப்பிலும் சமூக நீதியைக் கொண்டுவந்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததோடு, அவர்கள் நலனைக் கவனிக்க அது கொண்டுவந்த ‘தொழிலாளர் ஆணையர்’ பதவியிடம் முக்கியமானது.
மதறாஸ் மாகாணம் தன்னுடைய மொத்த செலவில் கல்விக்காக 1900 – 1940 காலகட்டத்தில் 5.4% செலவிட்டது. 1940-களில் இது 16% அளவுக்கு உயர்ந்தது. ஒருகட்டத்தில் பரோடா, திருவிதாங்கூர் சமஸ்தானங்கள் இரண்டும் சேர்ந்து செய்த செலவுக்குச் சமமாக இருந்தது மதறாஸ் மாகாணம் கல்விக்கு ஒதுக்கீடு செய்த தொகை. ஆட்சிக்கு வெளியிலிருந்து தமிழ் மக்களின் நலன்களுக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருந்த பெரியாரின் குரல் இதற்கு முக்கியமான ஒரு காரணம். கட்டாயத் தொடக்கக் கல்வியை அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்பது உட்பட 14 அம்ச செயல்திட்டத்தை நீதிக் கட்சி அரசிடம் முன்பு பெரியார் அளித்ததை இங்கு குறிப்பிடலாம்.
சுயமரியாதை இயக்கம் வளர்ந்து நீதிக் கட்சியையும் உள்ளடக்கி திராவிடர் கழகமானபோது, கலாச்சாரரீதியாக தமிழ் மறுமலர்ச்சிக்கு உழைத்தனர். பிற மொழி கலவாமல் தமிழில் பேசும், எழுதும் தனித்தமிழ்ப் போக்கு உச்சம் நோக்கி நகர்ந்தது. சம்ஸ்கிருதப் பெயர்களைத் தவிர்த்து தூய தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டினர்.
நீதி தவறியதை அறிந்ததும் உயிரைத் துறந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் பெயரை ஏராளமானோர் சூட்டிக்கொண்டது இதில் கவனிக்கத்தக்கது. 1967 வரை தமிழ்நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியும் இந்தத் தமிழ் தேசிய – சமூக நீதி அலையில் தப்ப முடியவில்லை. முதல்வர் காமராஜர் இந்த வகையில் பல சமூக நலத் திட்டங்களை முன்னெடுத்தார்.
காமராஜரை ‘பச்சைத் தமிழன்’ என்று பெரியார் பாராட்டினார். காங்கிரஸின் கொள்கைகள் தேசிய அளவில் வேறாகவும் தமிழக அளவில் வேறாகவும் இருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். அதேபோல, வளர்ச்சி நோக்கிலும் தேசிய அளவில் தொழில்துறைக்கு முன்னுரிமை தந்த காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை தந்தது.
திமுகவின் எழுச்சி, தமிழ் தேசிய இயக்கத் தலைவராக அண்ணாதுரையை உயர்த்தியதோடு, தமிழ் தேசிய இயக்கம் பரவுவதிலும் முக்கியப் பங்கு வகித்தது. மேடைப் பேச்சு, பத்திரிகைகள், நாடகங்கள் என்று கிளை விரித்த திராவிட இயக்கத்தினர் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. அண்ணாவுக்குப் பின் பெரும் தலைவர்களாக உருவெடுத்த மு.கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘பராசக்தி’ (1952) படம் ‘பிறக்க ஒரு நாடு – பிழைக்க ஒரு நாடு’ என்று தமிழர்கள் அல்லல்படுவதைத் தொட்டது.
எம்ஜிஆர் இரு வேடங்களில் நடித்து வெளியான ‘நாடோடி மன்னன்’ (1958) படம் தமிழ் இனத்தின் நெறிகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைப் பேசியது. இதெல்லாம் படித்த மேல்தட்டு மக்களிடம் மட்டுமல்லாமல், பாமர மக்களிடையேயும் ‘நாம் தமிழர், நாம் வளர்ச்சி பெற வேண்டும்’ என்ற எண்ணம் வேரூன்ற வழிவகுத்தது.
மொழி, இனம், வரலாறு ஆகியவற்றை ஒரே மாதிரி கொண்ட மக்கள் வாழும் மாநிலங்களாக இருந்தால் பூசல்கள் குறையும்; ஒற்றுமை அதிகமாகும் என்று மாநில மறுசீரமைப்புக் குழுவிடம் அளிக்கப்பட்ட மனுவை இங்கு குறிப்பிடலாம். தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறையுள்ள கட்சி தாங்கள்தான் என்ற உணர்வை திமுக ஏற்படுத்தியிருக்கிறது என்று 1957 பொதுத் தேர்தலுக்குப் பிறகு ‘ஜனசக்தி’ என்ற கம்யூனிஸ்ட் நாளிதழ் ஒப்புக்கொண்டது.
1967-ல் ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணாவின் திமுக, ஓராண்டுக்குள் முக்கியத்துவம் வாய்ந்த சமூக நலத் திட்டங்களை அமல்படுத்தியது. ‘ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ திட்டம் அதன் தொடக்கம். உணவு தானியங்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டது. அண்ணாவுக்கு அடுத்துவந்த கருணாநிதி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரும் திட்டத்தைப் பெரிய அளவில் முன்னெடுத்தார். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளின் எண்ணிக்கை பெருகின. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டது. இதனூடாகவே ‘எங்கும் தமிழ் – எதிலும் தமிழ்’ உணர்வு தூக்கிப் பிடிக்கப்பட்டது. இதன் ஓர் அங்கமாக உருவான தமிழ்த்தாய் வாழ்த்து எல்லாப் பொது நிகழ்ச்சிகளிலும் தொடக்கப் பாடலானது. 1972-ல் தனிப்பட்ட மோதல் காரணமாக திமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர், அதிமுக என்ற கட்சியைத் தொடங்கியபோதிலும் தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பாற்றினார்.
சமூகரீதியாகப் பிளவுபட்டிருந்த மக்கள், ‘தமிழர்’ என்ற ஒற்றுமை உணர்வால் மாநிலமே ஒன்றுபட்ட பிரதேசமாகிவிட்டது என்று 1979-ல் குறிப்பிட்டார் அறிஞர் பிராஸ்.
திமுக, அதிமுகவின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படும் திட்டங்களை ‘இலவச திட்டங்கள்’ என்றும் வாக்குகளை இலக்காகக் கொண்டவை என்றும் பெரும்பான்மை ஊடகங்களும் அறிஞர்களும் கேலி பேசினர். சமூக நலத் திட்டங்களுக்கு அதிகம் செலவிடுவதன் விளைவுகளைக் குறைத்து மதிப்பிடுவதன் வெளிப்பாடே இது.
2000-ல் தமிழர்களின் ஆயுள் சராசரி 66 வயது என்றானது. 1995-லேயே தமிழ்நாட்டில் நிகழ்ந்த பிரசவங்களில் 84% பயிற்சி பெற்ற மருத்துவத் தாதியர் உதவியுடன் நிகழ்ந்த தோடு இதைத் தொடர்புபடுத்தலாம். அப்போது தேசிய சராசரி 42%. அதாவது, தமிழகம் அதைப் போல இது இரு மடங்கு அதிகமாக இருந்தது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தமிழக அரசு எடுத்துக்கொண்ட அக்கறையை இங்கே பார்க்கலாம். ஓராண்டில் தன்னுடைய பகுதியில் சிசு மரணம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் மருத்துவ செவிலியருக்கு ஒரு சவரன் தங்கம் தமிழகத்தில் பரிசாகத் தரப்படுகிறது.
ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அதிகாரி, மாவட்ட ஆட்சியர்களுக்குக்கூட சுழல் கேடயம் பரிசு அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனர். கிராமங்களில் வீடுகளில் மருத்துவப் பயிற்சி இல்லாதவர்கள் பிரசவம் பார்ப்பதைத் தடுக்க, வீட்டுக்கே சென்று பிரசவம் பார்க்கும் செவிலியருக்கு ஒவ்வொரு பிரசவத்துக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிக்கலான மகப்பேறுகளை அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்தாலும் இப்படி யான ஊக்கத்தொகை உண்டு. இவ்வளவும் சேர்ந்துதான் தமிழர்களின் சராசரி ஆயுள் காலத்தை இன்று 66 வயதாக உயர்த்தி இருக்கின்றன.
தமிழ்நாடு, திராவிட இயக்கம் என்றால், துணை தேசியத் தின் வழியே அவர்கள் அடைந்த வளர்ச்சியே என் நினைவில் இருக்கும். இந்தியாவுக்கான பாடமும் இதில் உண்டு!
தமிழில்: வ.ரங்காசாரி
(ஆதாரம்)
பார்க்க… முகநூல் உரையாடல்