கேள்வி: தமிழரைத் தமிழரே ஆள வேண்டும் Vs திராவிடரைத் திராவிடரே ஆள வேண்டும். வேறுபாடு என்ன?
பதில்:
திராவிடர்கள் என்போர் இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருவோர்.
இவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மட்டுமல்ல ஓடிசா, மேற்குவங்காளம், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் வரை புழக்கத்தில் உள்ள பல்வேறு மொழிகளைப் பேசியவர்கள்.
ஆரியர் என்போர் இந்த நிலப்பரப்புக்கு வெளியில் இருந்து வந்தோர்.
வெளியில் இருந்து வருவோர் நாட்டைப் பிடிப்பது உலக அரசியலில் இயல்பு தான். ஆங்கிலேயர் நம்மை ஆண்டது அரசியல் அடிமைத் தனம். அவர்கள் சென்றதுடன் அந்த அடிமைத்தனம் ஒழிந்தது.
ஆனால், இந்த ஆரியர்கள் சாதி, இந்து சமயம் ஆகியவற்றைக் கட்டமைத்து, சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, ஒருவருக்கு இன்னொருவர் அடிமை என்று பல படிகள் அமைந்த அடிமைத்தன முறையை உருவாக்கினர்.
இது சமூக அடிமைத்தனம்.
இந்த அடிமைத்தனத்தைத் தான் திராவிடம் எதிர்க்கிறது.
அதனால் தான் யார் திராவிடர்கள் என்பதற்கு மொழியும் சமயமும் தடை இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் இந்த அடிமைத்தனத்தை எதிர்த்து அனைவரும் பிறப்பால் சமம் என்னும் கொள்கையை முன்வைப்பது தான் திராவிட அரசியல்.
திராவிட நாட்டில் பார்ப்பனர் எனப்படும் ஆரியர் உள்ளிட்ட அனைவரும் சமம்.
திராவிட அரசியலை ஏற்றுக் கொண்ட எத்தனையோ பார்ப்பனர்கள் திராவிட இயக்கத்துக்கு உழைத்திருக்கிறார்கள்.
பார்ப்பனர் முதல்வர் கூட ஆகலாம்.
ஆனால், முதல்வர் ஆனாலும் திராவிடக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு அதன் வழி ஆட்சி புரியவேண்டும்.
வெறுமனே, தமிழர்களைத் தமிழர்கள் ஆள வேண்டும் என்று குறிப்பிடும் போது, எந்த ஆதிக்க எதிர்ப்புச் சித்தாந்த அடிப்படையும் இல்லாமல் அது மொழியின் பெயரால் கட்டமைக்கப்படும் சாதி, இன வெறிக் கொள்கையாகவே உள்ளது. இது பிற்போக்குவாதம்.
அதனால் தான் திராவிடர்களைத் திராவிடர்கள் ஆள வேண்டும் என்கிறோம். இது முற்போக்குவாதம்.
முதல்வர் ஆனால் கூட ஏற்றுக் கொள்கிறீர்கள் ஆனால் பார்ப்பனர்களை ஏன் திராவிடர்கள், தமிழர்கள் என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்றால்,
ஆயுதம் தாங்கிய ஒருவன் தான் திருந்தி சமாதானத்துக்கு வருகிறேன் என்று சொன்னால்,
ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு நிராயுதபாணியாக வர வேண்டும்.
ஆயுதங்களைத் ஏந்தியுள்ள ஒருவனை ஒருக்காலும் நம்ப முடியாது.
பூணூலைத் தரித்துக் கொண்டு சாத்திரம், சடங்கு, சம்பிரதாயம், சாதி உயர்வு, புராணக்கதைகளைப் பேசி, தொடர்ந்து சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் பார்ப்பனர்கள் இத்தகைய தங்கள் ஆயுதங்களை உதறித் தள்ளி வந்தால் அவர்களை நம்பலாம்.
அவர்கள் பிறப்பு பிரச்சினை இல்லை. அவர்களின் கொள்கை தான் பிரச்சினை.
பெரியார் திடலின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கின்றன.