கேள்வி: தமிழக அரசு தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை தருகிறதே? இது சரியா?
பதில்:
கனடா அரசும் சிங்கப்பூர் அரசும் தைப் பொங்கல் கொண்டாடினால் மகிழும் தம்பியே, தமிழக அரசும் அது போல் பல்வேறு பண்பாடுகளைக் கொண்டாடினால் ஏன் உனக்குக் கசக்கிறது?
பாக்கிஸ்தான் பிரிந்த பிறகு, “உங்களுக்குத் தான் தனி நாடு கொடுத்து விட்டோமே! இந்தியாவில் எதற்கு இசுலாமியருக்கு விடுமுறை” என்று கேட்க முடியுமா?
இதைப் போலவே, 1956 வரை இருந்த மதராஸ் மாகாணத்தில் அனைத்து மொழி பேசும் மக்களும் இருந்தார்கள்.
“உங்களுக்குத் தான் தனி மாநிலம் தந்து விட்டோமே இனிமே உங்கள் பண்பாட்டை மதிக்க மாட்டோம், தனி விடுமுறை தர மாட்டோம்” என்று கூற முடியாது.
2011 கணக்கெடுப்பின் படி, தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் மக்களின் விழுக்காடு 5.8%. தமிழ்நாட்டில் தமிழுக்கு அடுத்து அதிகம் பேசப்படும் மொழி தெலுங்கு. இந்தியாவில் ஆந்திரம்/தெலங்கானா, கர்நாடாகவுக்கு அடுத்து, அதிகம் தெலுங்கு பேசப்படும் மாநிலம் தமிழ்நாடு.
கர்நாடகாவில் 3.45%, கேரளாவில் 1.5%, ஒருங்கிணைந்த ஆந்திராவில் 0.84%. மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை விடுவது போல் அங்கும் தமிழர் விழாக்களுக்கு விடுமுறை விடுங்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
எல்லையோர மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விட்டால் மகிழ்ச்சி. ஆனால், விடாவிட்டால் அநீதி ஆகாது. கேரளா, தெலங்கானாவில் தமிழ் பேசும் அரசுப் பணியாளர்களுக்கு விருப்ப விடுமுறை இருக்கிறது.
இவை எல்லாவற்றையும் விட பெரிய highlight சிங்கப்பூரில் தமிழர்களின் எண்ணிக்கை 7% மட்டுமே. ஆனால், தமிழ் அங்கு நான்கு தேசிய மொழிகளுள் ஒன்றாகும். தமிழன் அங்கு அமைச்சராகவும் அதிபராகவும் ஆக முடிகிறது. பெரும்பான்மைவாதம் பேசினால் இது எல்லாம் சாத்தியப்படுமா?
இலங்கையில் இருந்து கனடாவுக்குச் சென்ற குடும்பத்தைச் சேர்ந்த ராதிகா சிற்சபேசன் ஒரே தலைமுறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதைக் கொண்டாடுகிறோமே! இங்கு தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக வாழும் வேற்று மொழி பேசும் மக்கள் அரசியலில் வெற்றி பெறுவது தவறா?
தமிழக நிலப்பரப்பை வரலாறு முழுக்க யார் ஆண்டிருந்தாலும், எது சரி/தேவை என்று மக்கள் முடிவெடுக்கும் அதிகாரம் வந்தது 1900களுக்குப் பிறகு தான். தமிழகத்தில் நடப்பது தமிழர்களின் ஆட்சியா மற்ற மொழியினரின் ஆட்சியா என்பதற்கு முன் அது மக்களாட்சி என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இங்குள்ள மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.
பல்வேறு இன மக்களைத் தமிழக அரசு முறையாக நடத்துவதற்கு நாம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைய வேண்டும். முதிர்ந்த மக்களாட்சி உள்ள அரசு தான் பல்வேறு பண்பாடுகளையும் கொண்டாடும். அந்த முதிர்ச்சி உள்ள அரசு தான் தன் சொந்த மக்களையும் நன்றாக நடத்தும்.
பி.கு. சித்திரை முதல் நாள் கொண்டாடுவது பார்ப்பனப் புத்தாண்டே. இதைத் தமிழ்ப் புத்தாண்டு என்று நம்மையும் தெலுங்குப் புத்தாண்டு என்று மனவாடுகளையும் நம்ப வைத்து விட்டார்கள். இந்த அரசியலைப் பேசுவதே இன்றைய தேவை. தை முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு!
பார்க்க… முகநூல் உரையாடல்