சைக்கிள் ஓட்டுவது ஒரு சமூக இயக்கமா?
அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று இந்தக் கேள்விக்கு பதில் சொல்லப்படலாம். ஆனால், புதுக்கோட்டையில் முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான கிராமத்துப் பெண்களிடம் இந்த பதில் எடுபடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல பெண்கள், தங்களின் தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து வெளியேற, தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்த சைக்கிள் உறுதுணையாக இருக்கிறது.
இந்தியாவின் ஏழ்மையான மாவட்டங்களில் ஒன்றான இங்கு, சைக்கிள் ஓட்டுதல் என்பது கிராமப்புறப் பெண்களுக்கு சிறப்பான இயங்குவெளியாக இருக்கிறது. கடந்த 18 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெண்கள் இங்கு சைக்கிள் கற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறையாகக் கல்வி பயில்பவர்கள். இவர்களைப் பொறுத்த வரை இது சுயாதீனம், சுதந்திரம், மற்றும் இயங்குதலுக்கான ஒரு குறீயீடு.
10 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களை விதி விலக்காகக் கொண்டாலும் இங்கு நான்கில் ஒரு பெண் சைக்கிள் ஓட்டக் கற்றுள்ளார். 70 ஆயிரத்துக்கும் மேலானோர் பொது வெளியில் தங்களது புதிய திறமைகளைப் பெருமையுடன் முன் வைப்பவர்களாக உள்ளனர். இதற்கான பயிற்சி மையங்களும், அதில் பயிற்சி பெறும் கனவும் இப்போதும், தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
புதுக்கோட்டையின் பிரதானமான, மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட பகுதிகளிலிருந்து வரும் இளம் இஸ்லாமியப் பெண்கள் பரபரப்பான சாலைகளில் தங்களது சைக்கிளை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் ஒருவரான ஜமீலா பீபி, “ இது என்னுடைய உரிமை. நான் எங்கு வேண்டுமனாலும் செல்லலாம். பேருந்துக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. நான் சைக்கிள் ஒட்டக் கற்றுக் கொள்ளும் போது என்னைப் பற்றி எல்லோரும் தவறாகப் பேசுவார்கள் என்று தெரியும். ஆனால் நான் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை” என்று சொல்கிறார். பாத்திமா ஒரு இடைநிலை ஆசிரியை. சைக்கிள் ஓட்டும் சுகத்திற்கு அடிமையானதால் மாலை நேரத்தில் அரை மணி நேரத்திற்கு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு ஓட்டுகிறார். “ சைக்கிள் ஓட்டுவதில் ஒரு சுதந்திரம் இருக்கிறது. இப்போது நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. என்னால் ஒருபோதும் இதை விட்டுக் கொடுக்க முடியாது” என்கிறார் அவர்.
ஜமீலா, பாத்திமா மற்றும் அவரது தோழி அவக்கன்னி என்று 20-களில் இருக்கும் பல பெண்கள் மற்றவர்களுக்கு சைக்கிள் ஓட்டும் கலையைக் கற்றுக் கொடுக்கின்றனர். விவசாயத் தொழிலாளர்கள், சுகாதார ஊழியர்கள், பள்ளி ஆசிரியைகள், அங்கன்வாடி ஊழியர்கள் என்று இந்த மாவட்டமே கம்பீரமாக பெடல் போடும் பெண்களால் ஆனது. இப்படி சைக்கிள் ஓட்டும் எல்லாருமே புதிதாகக் கல்வி கற்றவர்கள். மாவட்டத்தின் இந்தப் படிப்பறிவுப் புரட்சி, அறிவொளி இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டது.
புதிதாகக் கல்வி கற்ற, புதிதாக சைக்கிள் கற்ற எந்தவொரு பெண்ணிடம் பேசும் போதும், சைக்கிள் ஓட்டுவதற்கும் தனிப்பட்ட சுதந்திரத்திற்குமான நேரடித் தொடர்பை என்னால் உணர முடிந்தது. இந்த சைக்கிள் இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவர்களில் ஒருவரும் அறிவொளி மையத்தின் துணை ஒருங்கிணைப்பாளருமான கண்ணம்மாள், “ இது பெண்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. குறிப்பாக, அன்றாட வேலைகளுக்காக ஆண்களைச் சார்ந்திருப்பதை இது குறைத்தது. இப்போதெல்லாம் ஒரு பெண் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று சைக்கிளில் தண்ணீர் எடுத்து வருவதை, அதுவும் சில நேரம் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு சைக்கிளில் வருவதை நீங்கள் பார்க்க முடியும்.
ஆனால், தங்கள் நடத்தை மீதான ஆண்களின் தனிப்பட்ட தாக்குதல்களுக்கு மத்தியில்தான் இவர்கள் இதைத் தொடங்கினர். இதற்கான சமூக வெளியை அறிவொளி இயக்கம் அவர்களிடத்தில் உருவாக்கியது. எனவே பெண்கள் இதற்குள் தைரியமாக வந்தார்கள். ஒரு அறிவியல் பட்டதாரியாக இருந்தபோதும் கண்ணம்மாவுக்கே தொடக்கத்தில் சைக்கிள் கற்றுக் கொள்ள முடியும் என்ற தைரியம் இல்லை.
அறிவொளியின் சைக்கிள் முகாமைப் பார்வையிடுவதே ஒரு அசாதாரணமான அனுபவம். கீழக்குறிச்சி கிராமத்தைப் பொறுத்த வரை அனைத்து சைக்கிள் பயிற்சியாளர்களும் தங்கள் ஓய்வு நாளான ஞாயிற்றுக்கிழமைகளை மிகவும் சிறப்பானதாக மாற்றிக் கொள்கின்றனர். தங்கள் அன்றாட வேலைகளில் சூழ்ந்திருக்கும் ஆணாதிக்கத் தடைகளிலிருந்து சைக்கிள் ஓட்டுவது தங்களை வெளியேற்றும் என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் இதற்காகப் பாடல் கூட பாடுகின்றனர். பெண்கள் இப்படி சைக்கிள் ஓட்டுவதற்குப் பல ஆண்கள் எதிராக இருந்த போதும், “ ஓ ! அக்கா சைக்கிள் கற்க வா, காலத்தின் சக்கரத்தில் நீயும் சேர்ந்து ஓட வா…” என்ற அந்தப் பாடலை எழுதியவர் மது பாஸ்கரன் என்ற அறிவொளி செயற்பாட்டாளர்தான்.
இந்த ஒட்டுமொத்த நடைமுறையும், பிரபல முன்னாள் கலெக்டர் ஷீலா ராணி சுங்கத்தின் மூளையில்தான் உதயமானது. 1991 ஆம் ஆண்டில் அவர், பெண் செயற்பாட்டாளர்களுக்கு சைக்கிள் கற்றுக் கொடுப்பதால் படிப்பறிவும் இன்னும் ஆழமாகச் சென்றடையும் என சிந்தித்தார். நகர முடியாமல் ஒரே இடத்தில் இருப்பது பெண்களின் நம்பிக்கையை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்த அவர் வங்கிகள் மூலமாகப் பெண்கள் சைக்கிள் வாங்குவதற்கான முன்னெடுப்புகளைச் செய்தார். கிராமத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மூலமாக அவர் இதில் தனித்த அக்கறை எடுத்துக் கொண்டார்.
முதலில் செயற்பாட்டாளர்கள் சைக்கிள் கற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களிடம் முதல் தலைமுறையாகக் கல்வி கற்பவர்கள் சைக்கிள் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டார்கள். இதனால் லேடீஸ் சைக்கிள்கள்களே கிடைக்காத நிலை கூட உருவானது. எதைப் பற்றியும் யோசிக்காமல், அவர்கள் ஆண்களுக்கான சைக்கிளையும் ஓட்டினர். பின்னர் அதன் சீட்டுடன் வசதியான ஒரு அமைப்பை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அதில் குழந்தைகள் உட்கார்ந்து வருவதை நீங்கள் பார்க்கலாம். இது போன்று ஆயிரக்கணக்கான பெண்களுக்கும் மேல் சொந்தமாக ஒரு சைக்கிள் வாங்குவதே கனவாக இருக்கிறது.
1992-93 காலகட்டத்தில் மட்டும் புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மாவட்டத்தில் சைக்கிள் கற்றுக் கொண்டனர். 1992ஆம் ஆண்டு மகளிர் தினத்துக்குப் பிறகு, இந்தப் பெண்களில் 1500 பேர் கலந்து கொண்ட அனைத்து மகளிர் சைக்கிள் பேரணியால் புதுக்கோட்டை மாவட்டமே ஸ்தம்பித்தது. அங்குள்ள ராம் சைக்கிள்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான கனகராஜன் தனது நிறுவனத்தில் மட்டும் அதிசயிக்கத்தக்க அளவுக்கு சைக்கிள் விற்பனை 350 சதவீத அளவுக்கும் மேல் அதிகரித்ததாகத் தெரிவிக்கிறார்.
கல் குவாரியில் வேலை செய்பவரும் அறிவொளி இயக்கத்தின் தன்னார்வலருமான மனோரமணி(22) தனது சக தொழிலாளிகள் சைக்கிள் கற்றுக் கொள்வதை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார். “எங்களுடைய பகுதி அநாதரவாகத் துண்டிக்கப்பட்டது. யாருக்கு சைக்கிள் ஓட்டத் தெரிகிறதோ அவர்களால் மட்டுமே இங்கு இயங்க முடியும் என்கிறார். 1992 ஆம் ஆண்டு ஒரே வாரத்தில் 70 ஆயிரம் பெண்கள் தங்களது சைக்கிள் ஓட்டும் திறமையைப் பொது வெளியில் நடந்த கண்காட்சி மற்றும் போட்டிகளில் காட்சிப்படுத்தினர். இதனால் கவரப்பட்ட யுனிசெஃப் அமைப்பு அறிவொளி இயக்கத்தின் பெண் செயற்பாட்டாளர்களுக்காக 50 மொபெட் வண்டிகளை வழங்கியது.
சைக்கிள் ஓட்டுவது அவர்களது பொருளாதாரத்தில் பெரும் நல்வாய்ப்பை ஏற்படுத்துகிறது. சில பெண்கள் தாங்கள் விளைவித்த வேளாண் மற்றும் இதர பொருட்களை ஒரு குழுவாகச் சேர்ந்து கிராமங்களில் விற்பனை செய்யத் தொடங்கினர். அவர்கள் பேருந்தை மட்டுமே நம்பியிருந்தால் நிச்சயம் இதைச் செய்ய முடிந்திருக்காது. “அவர்களைப் பொறுத்த வரை இது விமானத்தில் பறப்பது போன்ற இமாலயச் சாதனை. இதற்காக சிலர் சிரிக்கக்கூடும். ஆனால் பெண்களுக்குத்தான் இது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும்” என்கிறார் அறிவொளி இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளரான கண்ணம்மாள்.
இதற்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்தே வந்துள்ளனர். அப்படி எதிர்ப்பவர்கள் நிச்சயமாகத் தங்கள் சைக்கிளிலிருந்து கீழே இறங்கி நடந்தே செல்லலாம். ஏனென்றால் சைக்கிள் ஓட்டுவது என்று வரும்போது, இவர்கள் பெண்களைத் தங்களைப் போல நடத்துவதில்லை.
பின்குறிப்பு: நான் 1995 ஆம் ஆண்டு மீண்டும் புதுக்கோட்டைக்கு வந்தபோது, சைக்கிள் கற்கும் தீவிரம் இன்னும் அப்படியே இருந்தது. ஆனால் பெரும்பாலான பெண்களோ சொந்தமாக சைக்கிள் வாங்க முடியாத நிலையிலேயே இருந்தனர். இருப்பினும், இந்தியாவின் மாவட்டங்களில் ஆச்சர்யமளிக்கும் வகையில் சைக்கிள் ஓட்டுவதில் பெண்களின் அபார பங்களிப்பு உள்ள மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது. மற்றவர்களுக்கும் இப்படி செய்வதற்கான உத்வேகம் ஊட்டுகிறது.
இந்தக் கட்டுரை 1996 இல் வெளியான Everybody Loves a Good Drought என்ற சாய்நாத்தின் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
பார்க்க… முகநூல் உரையாடல்