சிதம்பரம் தொகுதி வெற்றியும் திமுகவினரும்:
தமிழகத்தில் உள்ள தலித் அமைப்புகள் எல்லாம் ஓரணியில் திரண்டு கூட்டணி அமைத்து எல்லா தனித் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று ‘முற்போக்கு’ இயக்குனர் ரஞ்சித் கருத்தொன்றை முன்பு தெரிவித்தார். அந்த கருத்தை அபத்தமென்று உணர்ந்து அதனை ஆரம்பநிலையிலேயே புறந்தள்ளினார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன். இன்று சிதம்பரம் எம்பியாக வென்றிருக்கிறார்.
அவர் வெற்றி பெற்றது குறித்து தமிழகமெங்கும் உள்ள திமுக கூட்டணியினர்க்கு மகிழ்ச்சி கொண்டாட்டம். இதில் சில அறிவுஜீவிகளுக்கு, சில தலித் அறிவுஜீவிகள் உட்பட, தான் பெருத்த ஏமாற்றம். திருமாவளவன் தோற்றால் திமுகவை திட்டி ஏற்கனவே எழுதப்பட்ட கட்டுரைகளோடு அவர்கள் தயாராக இருந்தனர். ஏனெனில், இப்படியான எழுத்துக்கும், ‘ஆய்வு’க்கும் பார்ப்பன ஊடகங்களிலும் academic circleளிலும் ஏகப்பட்ட கிராக்கி உண்டு. Intellectual(கண்றாவி) பட்டம் கிடைக்கும் என்பதால் தங்கள் பேனாவை கூர்த்தீட்டி வைத்து காத்திருந்தன சில கோடரிக்காம்புகள்!
(பெரிய மரத்தின் ஒரு கிளையில் வெட்டியெடுக்கப்பட்ட சிறிய துண்டு ஒன்று கோடரியின் கைப்பிடியாக மாறி அம்மரத்தை அடியோடு வீழ்த்தப் பயன்படும். அதனை கோடரிக்காம்பு என குறிப்பிடுகிறோம்)
அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அடிப்படையில் பாமகவின் செல்வாக்கு மிகுந்தவை. இங்கே திமுகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்ள சில பத்தாண்டுகள் போராட வேண்டியிருந்தது வரலாறு. திமுகவின் கோட்டையாக விளங்கிய வட மாவட்டங்களில் பாமகவின் தொடக்கம் பெரிய எழுச்சியாக இருந்தது. எண்ணற்ற கிராமங்களில் திமுகவின் கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
எல்லா எதிர்ப்புகளையும் சவால்களையும் மீறி கலைஞரின் வியூகத்தாலும் தொண்டர்களின் அர்ப்பணிப்பாலும் வட மாவட்டங்களில் திமுக மீண்டும் புத்துணர்ச்சியோடு எழுந்து நின்றது ஒரு superhero படத்துக்கான content! பாமகவினால் கரைபுரண்டோடும் ஜாதியுணர்ச்சி வெள்ளத்தில் இன்னமும் எதிர்நீச்சல் போட்டு தான் திமுக மேலே எழும்பி நிற்கிறது. இது அறிவுஜீவிகளுக்குத் தெரிகிறதோ இல்லையோ, ஆனால் திருமாவளவனுக்கு நன்றாக தெரியும். அவரும் முன்னாள் திமுககாரர் என்கிற அடிப்படையிலும் அரியலூர் மாவட்டத்துக்காரர் என்கிற அடிப்படையிலும் இவ்வுண்மையை உணர்வார்.
இந்தப் பின்னணியில் தான் சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவைப் பார்க்க வேண்டும்.
திருமாவளவன் வேட்பாளர் என்றதும் அதுவும் தனிச் சின்னத்தில் நிற்கிறார் என்றதும் பாமக கூடாரத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்டது. வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினர்.
எப்போதோ நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் திருமா பேசிய பேச்சு ஒன்று பாமகவினரின் பிரச்சாரத்துக்கு பெரிய ஆயுதமாக கிடைத்தது. தங்கள் மொபைல் போன்களில் அந்த பேச்சின் வீடியோவை எடுத்துக் கொண்டு வன்னியர் கிராமங்களில் ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடமும் போட்டுக் காட்டினர்.
அறிவுஜீவிகள் என்ன நினைக்கிறார்கள்! அந்த வீடியோவை வன்னியர் மக்கள் இடதுகையால் புறந்தள்ளிவிட்டு வந்து பானை சின்னத்துக்கு ஓட்டுப் போட்டிருக்க வேண்டும். அப்போதுதான் இது பெரியார் மண். இல்லையென்றால் இல்லை! என்று திமுகவுக்கு எப்போதும் வகுப்பெடுக்கும் அறிவுஜீவிகள் கருதுகிறார்கள்.
பாமகவால் ஏற்கனவே ஜாதி உணர்வு தளும்பும் தொகுதி, போதாக்குறைக்கு காடுவெட்டி குருவின் சொந்தத் தொகுதி!
திருமாவின் அந்தப் பேச்சு வீடியோ ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது என்பதை தொகுதியில் தேர்தல் பணியாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். வன்னியர்களிடையே மட்டுமல்லாது முதலியார்கள், பிள்ளைகள், இஸ்லாமியர்கள் என்று எல்லா சமூகத்தினர் மத்தியிலும் அந்த வீடியோவைக் கொண்டு பாமகவினர் கடும் பிரச்சாரம் செய்தார்கள்.
இந்த சூழலில்தான் ஒவ்வொரு கிராமத்திலும் திமுகவினர் திருமாவுக்காக வாக்கு சேகரித்தனர். அதற்காக தமது சொந்த ஜாதி மக்களிடமிருந்தே அவர்கள் சந்தித்த கேலி கிண்டல்கள் அவமானங்களை எல்லாம் எழுத்தில் எழுதிவிட முடியாது.
கடந்த 2009 தேர்தலில் திருமாவுக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது திருமாவை ஆதரித்து வேலை செய்த திமுகவினரைப் பார்த்து கிராமங்களில் கிண்டலாக ‘என்ன திருமா உனக்கு மாமா, மச்சான் முறையா.. அவருக்கு மோதிரம் போட கிளம்பிட்டீங்க’ என்று பாமகவினர் நையாண்டி பேசினர். ‘ஆமாம்டா. அப்படி தான்’ என்று அவர்களுக்கு விடை சொல்லிவிட்டு தேர்தல் வேலை பார்த்த சாதாரண ஒரு திமுக தொண்டன் ஆயிரம் வாசுகி பாஸ்கர், ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற ‘கருத்து சொல்லிகளுக்கு’ மேலானாவர்கள்.
அதற்கு அடுத்து வந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவன் திமுகவுக்கு எதிராக அமைந்த மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்று விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார்.
இப்போது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் மற்றும் விழுப்புரம்!
விசிகவுடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு வன்னியர்கள் ஓட்டு கிடைக்கவே கிடையாது என்று பாமகவினர் பகிரங்க மிரட்டல் விடுத்தனர். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வன்னியர்கள் ஓட்டு வாங்காமல் நீங்கள் எப்படி ஜெயிப்பீர்கள் பார்ப்போம் என்று திமுகவினரைப் பார்த்து பாமகவினர் கேட்டனர்.
ஊராட்சித் தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற நிலையிலும், பாமகவினரின் மிரட்டல்களுக்கு பணியாது திமுகவினர் திருமாவுக்காக பானை சின்னத்தில் ஓட்டுக் கேட்டனர்.
விசிக தொண்டர்கள் தலித் காலனிகளில் மட்டுமே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நிலையில், திமுகவினர்தான் ஊர்ப் பகுதிகளில் வாக்குச் சேகரித்தனர். இதனை இல்லையென்று களத்தில் பணியாற்றிய ஒரே ஒரு விசிக தொண்டராவது மறுக்க முடியுமா?
உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட நினைத்திருக்கும் ஒரு திமுக நிர்வாகி இப்படி சொன்னார் “எங்க ஊர்ல 2000 ஓட்டு தாங்க இருக்கு. பெரும்பகுதி வன்னியர் ஓட்டுகள். திருமாவுக்கு ஓட்டுக் கேட்டால் இந்த ஓட்டுகள் எனக்கு விழாது என்று பாமகவினர் சொன்னார்கள். நமக்கு ‘கட்சி’தானுங்களே முக்கியம். அதனால் ஊர் முழுக்க சுவர்களில் பானை சின்னம் வரைஞ்சிப் போட்டாச்சு. பாமக கூட்டணியில இருக்கிறதால நம் ஊர்ல அதிமுகவை விட ஓட்டு லீட் காட்ட முடியாது. ஆனால் திமுக ஓட்டு ஒன்னுவிடாம பானைக்கு வாங்கிடுவோம்.”
இதுபோன்ற திமுக நிர்வாகிகள் தொகுதி முழுவதும் இருந்தார்கள், திருமாவுக்காக பணியாற்றினார்கள். ஒருசில ஓட்டைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்திருக்கலாம். ஆனால் திமுகவினரின் உழைப்பை யாராலும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.
ஒவ்வொரு ஊரிலும் பானை சின்னத்தை வரைய திமுகவினர் பட்ட சிரமம் கொஞ்சநஞ்சமல்ல. திருமாவின் பேச்சு வீடியோவின் விளைவுகள் இவை. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கூட மோதிரம் சின்னத்தை வரைவதற்கு சுவர் தந்தவர்கள் கூட, இந்த தேர்தலில் பானை வரைய சுவர் தர முடியாது என்றனர்.
எதிர்ப்பவர்களிடம் எல்லாம் உட்கார்ந்து பேசி தான் பானை சின்னம் வரையப்பட்டது. குறுகிய காலத்தில், புதிய சின்னம் எல்லா மக்களையும் சென்று சேர்ந்தது.
பாமக ஆதிக்கமுள்ள சில ஊர்களில் திருமாவளவன் பெயரைக் கூட எழுதாமல் வெறும் பானை சின்னத்தை மட்டும் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் வரைந்து அச்சின்னத்தை பிரபலப்படுத்தும் நிலை கூட இருந்தது. ‘தளபதி முக ஸ்டாலின் ஆதரவு பெற்ற சின்னம் பானை’ என்று மட்டுமே சில சுவர்களில் எழுதப்பட்டது.
அந்த அளவுக்கு பாமக எழுப்பியிருந்த எதிர்ப்புச் சுவரை, நெருப்பாற்றை மீறி திமுக கூட்டணி மக்களை சந்தித்தது. இதெல்லாம் குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து நாலு தமிழ் புக், நாலு இங்க்லீஸ் புக் மேலோட்டமாகப் படித்துவிட்டு activistsகளாக, intellectualsகளாக காட்டிக்கொள்ளும் அரைகுறைகளுக்குப் புரியாது. திருமாவுக்கு நிச்சயம் புரியும் திமுகவின் பங்களிப்பு எத்தகையது என்பது!
சிதம்பரம் தேர்தல் களமே – திமுக vs பாமக மோதும் களமாக மாறியது. மு க ஸ்டாலினை வெளியே நடமாட விட மாட்டோம் என்று பாமக மாநில நிர்வாகி ஒருவர் ஜெயங்கொண்டம் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார். ராமதாஸையும் அன்புமணியையும் தைலாபுரம் தோட்டத்திற்குள்ளேயே ஜனநாயக வழியில் முடக்குவோம் என்று எஸ் எஸ் சிவசங்கர் சவால் விடுத்தார். இதனையடுத்து அரியலூர் மாவட்டமே அனலில் தகித்தது. இதையெல்லாம், இந்த அறிவுஜீவிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் எப்படி எளிதாக கடந்து விடுகிறார்கள்?
திருமா மீது பாமக சுமத்தும் களங்கத்தை முறியடிக்க திமுக ஒவ்வொரு கிராமத்திலும் நடத்திய ஸ்பெஷல் ஊராட்சி சபை கூட்டங்கள் செம ஹைலைட்! நல்ல பலனை கொடுத்தது.
தலித் மக்கள் எண்ணிக்கையில் நிறைய இருக்கும் காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிகளின் கிராமங்களில் பரவாயில்லை. வன்னியர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் திமுகவினரின் பணி அளப்பரியது.
திமுக மட்டும் அந்த கிராமங்களில் இல்லையென்றால், பாமகவினர் தலித் மக்களை ஓட்டுப்போடவே விட்டிருக்க மாட்டார்கள். தலித் மக்களின் வாக்குகள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து சேரவும் திமுக கூட்டணி தான் முக்கியக் காரணம்.
சிதம்பரம் தொகுதியில் திருமாவுக்கு சின்னம் கிடைத்ததும் தாமதம், அவர் பிரச்சாரம் தொடங்கியதும் தாமதம். அதற்குள் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரன் தொகுதிக்குள் முதற்கட்டச் சுற்றுப்பயணத்தையே முடித்துவிட்டார்.
நாட்கள் குறைவாக இருந்ததால் திருமாவால் ஒரு ஒன்றியத்தில் ஒரு நாட்களுக்கு மேல் வாக்குக் கேட்டு பிரச்சாரம் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு ஒன்றியத்திலும் பல கிராமங்களுக்கு திருமா ஓட்டுக் கேட்டு செல்லவில்லை. ஆனாலும் அந்த ஊர்களில் எல்லாம் திமுகவினரின் உழைப்பால் பானை சின்னத்துக்கு ஓட்டுகள் விழுந்திருக்கின்றன.
எஸ் எஸ் சிவசங்கர், எம்ஆர்கே பன்னீர்செல்வம், பண்ருட்டி வேல்முருகன் ஆகியோரின் உழைப்பு தான் பாமகவின் பிரச்சாரத்தை எதிர்கொண்டது.
தினந்தோறும் தெருவாரியாக திமுகவினர் வாக்கு சேகரித்தனர். இதற்கான செலவுக்கு விசிக நிர்வாகிகள் பணம் கொடுத்தார்களா? இல்லை. திமுக நிர்வாகிகள் தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்தார்கள்.
சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு ஊரில் திமுகவினர் குறைந்தது 10 பேராவது தினமும் ஒரு இடத்தில் கூடி ஒரு நாளைக்கு ஒரு தெருவாக சென்று வாக்குக் கேட்டனர். டீ குடிக்கும் செலவைக் கூட அவர்களே பார்த்துக் கொண்டனர். இல்லையென்று விசிகவினரே கூட மறுக்க மாட்டார்கள்.
திருமாவை வாக்கு சேகரிக்க விடாமல் சில ஊர்களில் பாமகவினர் மறித்தார்கள், சில ஊர்களில் திட்டமிட்டார்கள். அவர்கள் யாரைப் பார்த்து பின்வாங்கினார்கள் என்று திருமாவை கேட்டாலே சொல்வார். எஸ் எஸ் சிவசங்கர் பிரச்சார வாகனத்தில் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும் என எல்லோர்க்கும் தெரியும். திருமாவுக்கும்-பாமகவுக்கும் மோதல் உண்டாகியிருந்தால் இந்த தொகுதியில் பெரிய கலவரமே வெடித்திருக்கும். அப்படி எதுவும் நடந்துவிடாமல் திருமாவும் கவனமாக இருந்தார், திமுகவினரும் கவனமாக பாமகவை கையாண்டார்கள். பானைக்கு தங்களால் இயன்ற அளவு வாக்குகளை கொண்டு வந்து சேர்த்து, இறுதியாக வெற்றியும் பெற்றாகிவிட்டது.
எங்கேயிருந்தோ கட்டுரைகள் எழுதும் அறிவுஜீவிகளுக்கு திருமாவளவனின் வெற்றி மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறது. பாமகவினரால் மன ரீதியாக வாட்டி வதைக்கப்பட்ட அப்பாவி திமுக தொண்டர்கள் அவர்கள் கண்ணுக்கு தெரிய மாட்டார்கள்.
அவர்களின் பங்களிப்பை அங்கீரத்து பாராட்ட வேண்டும் என்று கூட அந்த தொண்டர்கள் எதிர்பார்க்கவில்லை. திமுகவினரின் பங்களிப்பே இல்லாமல், திருமா தனிச் சின்னத்தில் நின்று அவர் மட்டுமே போராடி வெற்றி பெற்றிருக்கிறார் என்று இந்த அறிவுஜீவிகள் எழுதுவது அந்த அப்பாவி தொண்டர்களை எவ்வளவு காயப்படுத்தும்?
விசிகவினர் – திமுகவினரின் கூட்ட முயற்சியின் விளைவு தான் திருமாவின் இந்த வரலாற்று வெற்றி. இதை இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் இந்த அறிவுஜீவிகளுக்கு என்ன பிரச்சினை? அவர்களின் பிரச்சினை என்னவென்று நமக்கு நன்கு தெரியும்!
அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் திருமா நிற்கவில்லை. அவருடைய வெற்றி யாருடைய வெற்றிக்கும் இணையில்லை என்று சினிமா இயக்குனர் ரஞ்சித் டிவிட்டர் பதிவு போட்டிருந்தார். உண்மை தான்!
அலங்கரிக்கப்படாதிருந்த புதிய பானை சின்னத்தை ஊர்கள்தோறும் வரைந்து அலங்கரித்தவர்கள் திமுக தொண்டர்கள்! திருமாவின் வெற்றியை யாரோடும் ஒப்பிட முடியாது தான். காரணம், திமுகவினர் பாமகவினர் செய்த அவமானங்களை, இழிமொழிகளைப் பொருட்படுத்தாது விசிகவினரோடு கைகோர்த்து களத்தில் நின்று அயராது உழைத்ததால்!
தேர்தல் முடிவுக்கு பின்னர், பாமகவினர் எஸ் எஸ் சிவசங்கரையும் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தையும் எந்த அளவுக்கு ஆற்றாமையில் திட்டிப் பதிவு போடுகிறார்கள் என்று ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு, பிறகு இந்த அறிவுஜீவிகள் பேனா பிடித்தால் நல்லது!
(இதற்கு மேலும் அறிவுஜீவிகள் தங்கள் திருவிளையாடலை தொடர்ந்தால் ஒவ்வொரு ஊரிலும் விழுந்த வாக்குகளை எடுத்துப் போட்டு புள்ளிவிவரங்களோடு விவாதிக்கவும் தயார்!)
-முனியாண்டி ஐயங்கார்.
பார்க்க… முகநூல் உரையாடல்