கேள்வி: சாதியை ஒழிக்க கலப்புத் திருமணம் செய் என்று சிலர் சொல்கிறார்கள். நீங்கள் சாதி மாறித் திருமணம் செய்தாலும் சாதிச் சான்றிதழ் வாங்குவது பற்றி எழுதுகிறீர்கள். இது முரணாக உள்ளதே? ஏன் இப்படி சாதியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
பதில்:
சாதி ஒரு பேய்.
நாம் பேயைப் பிடிப்பதில்லை. பேய் தான் நம்மைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
கலப்புத் திருமணம் செய்வதால் மட்டும் சாதி ஒழியாது. அப்படிப் புரட்சிகரமான எண்ணங்களுடன் இந்தச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டாம்.
பிறகு எப்படித் தான் சாதியை ஒழிப்பது என்றால் அதே தலைப்பில் அண்ணல் அம்பேத்கர் ஒரு நூலை எழுதியுள்ளார். அதை வாங்கிப் படியுங்கள்.
சுற்றி வளைக்காமல் சுருக்கமாகச் சொல்வது என்றால் இந்து சமயத்தை ஒழிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது. இந்திரன் தான் சந்திரன். சந்திரன் தான் இந்திரன்.
நீங்கள் சாதி மாறித் திருமணம் செய்தால், உங்களைப் பார்த்து உங்கள் உறவில் இன்னும் சிலர் துணிவார்கள். அப்புறம் காலப்போக்கில் அது சகஜமாகி, “ஒழிந்து போங்கள்” என்று உங்கள் உறவுகளில் மட்டும் திருமணம் தொடர்பான சாதிப் பாகுபாடு “சற்று” குறையலாம். மற்றபடி, சாதி தன் வேலையைப் பல்வேறு களங்களில் காட்டிக் கொண்டு தான் இருக்கும். எனவே, உங்கள் ஒரு தலைமுறையில் சாதியை ஒழிக்கலாம் என்று கனவு காண வேண்டாம்.
சாதிக்குள் திருமணம் செய்பவர்களை விட சாதி மாறித் திருமணம் செய்பவர்கள் தான் சாதியால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சொத்தும் இல்லாமல், உறவுகளின் ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்குகிற அவர்களுக்கு அரசு தரும் இட ஒதுக்கீடு என்னும் உரிமை பெரும் சொத்து. புரட்சி செய்கிறோம் புண்ணாக்கு செய்கிறோம் என்ற மிதப்பில் உங்கள் குழந்தைகளுக்கான உரிமையைத் தொலைத்து விடாதீர்கள்.
ஒரு BCயும் SCயும் திருமணம் செய்து கொண்டால் அவர் FC ஆகி கோயிலில் அர்ச்சகர் வேலைக்குத் தகுதி பெற்று விடுவாரா என்ன? நீங்கள் சாதிச் சான்றிதழ் வாங்கினாலும் வாங்காவிட்டாலும், உங்களுக்கு என்று ஒரு சாதியை இந்தச் சமூகம் தீர்மானித்து வைத்துக் கொள்ளும். சான்றிதழ் இல்லாமல் அந்தப் பாகுபாட்டை எதிர்கொள்வதற்குப் பதில், சான்றிதழ் பெற்றுப் போராடுங்கள்.
உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியாது என்றா ஹெல்மெட் போடுகிறீர்கள்? வழியில் யார் வந்து எப்படி இடிப்பார்கள் என்று தெரியாமல் தானே போடுகிறீர்கள்!
அது போல், நீங்கள் சாதி பார்க்கிறீர்களா என்பது பொருட்டே இல்லை. இந்தச் சமூகம் உங்களைச் சாதிய கண்ணோட்டத்துடன் தான் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அதில் இருந்து உங்களைத் தற்காத்துக் கொள்ள சாதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள்.
பார்க்க – முகநூல் உரையாடல்