கேள்வி: இன்னும் மக்கள் ஏமாற்று மருத்துவ முறைகளை நாடுவதன் உளவியல் என்ன?
பதில்: ரொம்ப சிம்பிள்.
நம்ம ஊரில் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது.
வீட்டில் பியூஸ் போனால் நானே போடுவேன் என்பதில் தொடங்கி தானே புது வீட்டுக்குப் பிளான் போட்டுக் கட்டுவது என்று தொடர்வது சளி, இருமலுக்கு கசாயம் குடிப்பது போல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாம் என்பதில் வந்து நிற்கிறது.
இவ்வாறு பிரசவம் பார்த்து குருட்டு அதிர்ஷ்டத்தால் பிள்ளை பெற்றவர்கள், தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் அடுத்தவர்களை மூடர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். இதில் நாலு காசு மிச்சம் என்பது இவர்களுக்கு இன்னும் கூடுதல் உற்சாகம் அளிக்கிறது.
இந்த உலகமே அயோக்கியர்களால் நிறைந்திருப்பதாகவும் தங்களை அதில் இருந்து காத்துக் கொண்டதாகவும் நினைக்கிறார்கள். தான் செய்கிற தொழில் செழிக்க வேண்டும், ஆனால், ஊரில் ஒரு பயல் உழைத்து கூட முன்னேறி விடக்கூடாது. இதே பொறாமைக் குணம் தான் “பார்த்தாயா, அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள்” என்று கிளப்பி விடுபவர்களுக்கும் வசதியாக இருக்கிறது.
படிப்பறிவற்ற பாமரர்கள் கூட நவீன மருத்துவர்களை நம்புகிறார்கள். ஏன் எனில் அவர்களுக்குத் தங்களின் எல்லை தெரியும். அதே போல் வாழ்வில் நன்கு சாதித்தவர்களும் நவீன மருத்துவர்களை நம்புகிறார்கள். ஏன் எனில், அவர்களுக்கு உயிரின் அருமை தெரியும்.
எனக்கு வீடு கட்டத் தெரியாது. விமானம் ஓட்டத் தெரியாது. அது போல் மருத்துவம் பார்க்கவும் தெரியாது என்று உணர்ந்து மருத்துவர்களை நாடுவது தான் என் அறிவு. எல்லாவற்றையும் அறிந்திருப்பது அறிவு அன்று. நமக்கு என்னவெல்லாம் தெரியாது, யார் அதனைச் செயற்படுத்த சிறந்தவர்கள் என்று அறிந்து அவர்களை நாடுவதே அறிவு.
இதில் எனக்கு எந்தப் பெருமைக் குறைவும் இல்லை. ஏன் எனில், நான் படித்த படிப்பு, அதனால் பெற்ற அறிவு, வேலை வாய்ப்புகளால் என் தகுதி என்னவென்று எனக்குத் தெரியும். எனக்கு யாரும் சான்று கொடுக்கத் தேவை இல்லை.
இந்தத் தெளிவு வந்த எவரும் அனைத்துத் தொழில் வல்லுநர்களையும் மதிக்கத் தொடங்குவார்கள்.
பார்க்க… முகநூல் உரையாடல்