நமக்கு சாத்திரங்களில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியாது. ஆனால், தெருமுக்கு பிள்ளையார் கோயிலில் உருகி உருகி கடவுளை வேண்ட பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
அது போல், சாதி மாறி திருமணம் செய்தால் சொத்தில் சல்லிக்காசு பங்கு கிடையாது, மானம் போகிறது என்று பெற்றோர் மிரட்டுவதற்கும் ஆணவக் கொலை செய்யும் அளவுக்குப் போகவதற்கும் மனுநீதி போன்ற இந்து சமய சாத்திரங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு.
இந்து சாத்திரங்கள் அவரவர் தங்கள் வர்ணத்தில் (அதாவது சாதி அடுக்கு) தான் பெண்ணெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
இன்றும் காதல் திருமணம் செய்யும் போது, “நம்ம ஊர்ல நாம எப்படியோ, அவுக அந்த ஊர்ல அப்படி” என்று BC, MBC, SC பிரிவுகளை வைத்து சாதிகளின் ஏற்றத்தை ஒப்பிடுவதைக் காணலாம்.
அப்படியே சாதி மாறி திருமணம் செய்தால், அது இரண்டு வகையான திருமணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
Anuloma – இது பார்ப்பனர்கள், அரசர்கள், வணிகர்கள் வர்ண ஆண்கள் தங்களுக்குக் கீழே உள்ளதாகக் கூறும் சூத்திரர் குலப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வது. இப்படிக் குலம் மாறி திருமணம் செய்தால் அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குச் சொத்துரிமை கிடையாது. அப்பெண்கள் வைப்பாட்டிகளைப் போலவே அவர்கள் கருதப்படுவார்கள். இந்தியாவில் 1950கள் வரையுமே இது தான் சட்டமாக இருந்தது.
Pratiloma – இது பார்ப்பனர்கள், அரசர்கள், வணிகர்கள் குலப் பெண்களை சூத்திரர் குல ஆண்கள் மணப்பது. இதற்கு மன்னிப்பே கிடையாது. அவர்களை மொத்தமாகச் சாதி அடுக்கில் இருந்து ஒதுக்கி வைத்து சண்டாளர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் அறிவிக்கிறார்கள்.
இன்றளவும் ஒரு ஆதிக்கச் சாதி ஆண் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணைத் திருமணம் செய்வது பெரிய பிரச்சினையாக இல்லை. ஆனால், ஒடுக்கப்பட்ட சாதி ஆண் ஆதிக்கச் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய முயன்றால் மட்டும் ஏன் விரட்டிக் விரட்டிக் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கான விடை இங்கு தான் இருக்கிறது.
இதில் என்ன கொடுமை என்றால், சாத்திரத்தின் படி சூத்திரர்களான BC/MBC மக்கள் தங்களைப் பெரிய சாதிகளாக எண்ணி SC/ST மக்கள் உடன் மோதிக் கொண்டிருந்தால் திராவிடர்கள் தங்களுக்கு இருக்கும் அரசியல் அதிகாரத்தையும் இழப்பது தான் ஒரே விளைவாக இருக்கும்.
இந்த வரலாற்று இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல் ஆணவக் கொலைகளை முழுமையாகத் தடுக்க முடியாது.