கேள்வி: சரி இரவி, உண்மையிலேயே அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்தால் இவற்றின் தரம் உயராதா?
பதில்: உயராது.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாருக்கும் மூளையும் இல்லை, நேர்மையும் இல்லை, மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இன்றி ஓப்பி அடிக்கிறார்கள் என்ற தவறான எண்ணமே இவ்வாறான புரட்சிகரமான யோசனைகளுக்குக் காரணம்.
இப்படி ஒரு ஆணையை இடுவது இந்திய அரசியல் சாசனப்படி நடைமுறைச் சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு வாதத்துக்கு இத்தகைய ஆணை இட்டாலும் ஒரு மாவட்டத்துக்கு ஒரு சில மருத்துவமனைகளும் பள்ளிகளும் மட்டுமே தரம் உயரும். ஊரில் உள்ள மொத்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை அங்கு சேர்ப்பார்கள்.
கேந்திரியா வித்யாலயா, எய்ம்ஸ் என்று ஒரு சில நிறுவனங்களை மட்டும் கூடுதல் தரத்துடன் மத்திய அரசு உருவாக்கி வைத்திருப்பது இப்படித் தான்.
ஆனால், 125 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பட்டி தொட்டிகள் வரை கல்வி, மருத்துவச் சேவை சென்று சேர வேண்டும் எனில், முதலில் தேவைப்படுவது மனம். ஆம், அனைத்தும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற மனம். சோசலிச இந்திய நாட்டில் தமிழகம் இதற்கு வகுத்துக் கொண்ட பாதை தான் திராவிடம். அடுத்து பணம், ஆள் வளம். இவற்றை உருவாக்குவதற்கான திட்டங்கள், சட்டங்கள், நிறுவனங்கள்.
சற்று விளக்குகிறேன்.
1967. தமிழக அரசிடம் இருக்கிற மொத்தப் பணத்தையும் போட்டு வேறு அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு தமிழக அரசு மருத்துவமனைகளை மட்டும் கட்டுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் பணி புரிய போதுமான மருத்துவர்கள் இருப்பார்களா?
இல்லை. முதலில் மருத்துவர்கள் படிக்க கூடுதல் மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட வேண்டும்.
* சரி, பல பத்தாண்டுகள் உழைத்து கூடுதல் மருத்துவர்களை உருவாக்கி விட்டோம். அவர்கள் அனைவரும் தமிழகத்தின் அனைத்து மூலை, முடுக்குகளுக்கும் சென்று அரசுப் பணி புரிவார்களா?
மாட்டார்கள். ஏன்?
உயர் சாதி நகரப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் கிராமங்களுக்குப் போய் பணி புரிய மாட்டார்கள்.
* ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒவ்வொரு சாதியில் இருந்தும் மருத்துவர்கள் வந்தால் தான் அந்தந்த ஊர்களில் பணி புரிவார்கள்.
இதற்கு, கல்வியிலும் அரசுப் பணியிலும் முறையாக இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிக பட்சமாக 69% இட ஒதுக்கீடும், தகுந்த உள் ஒதுக்கீடுகளும் கொடுத்து சட்டம் இயற்ற வேண்டும். இது இந்திய பார்ப்பனிய – பனியா கூட்டத்துக்குப் பிடிக்காது. வழக்கு தொடுக்கும். அதனை முறியடித்து அரசியல் சாசனத்தில் இந்த இட ஒதுக்கீட்டுக்குப் பாதுகாப்பு பெற்றுத் தர வேண்டும்.
* எல்லாம் சரி, ஆனால் MBBS படித்து முடித்த பிறகு கிராமங்களுக்குப் போகாமல் மாவட்டத் தலை நகரங்களிலேயே தங்கி விடுகிறார்களே? அல்லது, தனியாருக்குச் சென்று விடுகிறார்களே? அல்லது, உயர்கல்வி படிக்கப் போய் விடுகிறார்களே?
சரி, அரசு மருத்துவராகப் பணி புரிந்தால் உயர் கல்வியில் 50% இட ஒதுக்கீடு என்று அறிவியுங்கள்.
* வா, வா, வா, அனைத்து மருத்துவர்களும் அரசு சேவைக்கு முண்டியடிக்கத் தொடங்கினார்கள். ஏன் எனில் உயர் கல்விக்கு இடம் கிடைப்பது அவ்வளவு கடினம்.
ஓ, உயர் கல்வியில் போதுமான இடங்கள் இல்லையா? அவற்றிலும் கூடுதல் இடங்களை உருவாக்குங்கள்.
* இப்போதும் சுபமா? இல்லையே, இத்தனை ஆண்டுகள் உழைத்துப் படித்த மருத்துவர்களுக்குப் போதுமான ஊதியத்தை அரசால் கொடுக்க முடியாதே?
ஒன்றும் சிக்கல் இல்லை. அவர்கள் அரசு பணி நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தனியாக மருத்துவம் பார்க்கலாம் என்று அறிவியுங்கள்.
இப்போது அரசுப் பணியில் தங்குகிறார்கள்.
ஒரே ஒரு குறை. என்ன?
* ஏற்கனவே படித்தவர்களின் பிள்ளைகளே அதிகம் மருத்துவர்கள் ஆகிறார்கள். கிராமப் புற மாணவர்கள் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி வாய்ப்பு பெறச் சிரமப்படுகிறார்கள்.
சரி, முதல் தலைமுறைப் பட்டதாரிக்கு கல்லூரிக் கல்வி இலவசம், கிராமப்புற மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு என்று அறிவியுங்கள்.
* இந்த நுழைவுத் தேர்வு தான் இறுதித் தடையாக இருக்கிறது. நுழைவுத் தேர்வையும் தூக்குங்கள். எல்லாரும் மருத்துவம் படியுங்கள்.
* எல்லாம் ரெடி. இருந்தாலும் மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரத் தயங்குகிறார்களே?
சரி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டம் அறிவியுங்கள். அரசு மருத்துவமனையில் பிள்ளை பெறுபவர்களுக்கு நாமே ஆயிரக்கணக்கில் காசு கொடுப்போம். வளைகாப்பு நடத்துவோம்.
* என்ன பண்ணாலும் சில வசதிகள் தனியார் மருத்துவமனையில் கிடைப்பது போல் வருமா?
சரி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிவியுங்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசே காப்பீட்டுத் தொகை செலுத்தும். அரசு சேவை போதவில்லை என்றால் தனியார் மருத்துவமனையில் பாருங்கள். அரசே காசு கட்டும்.
* தமிழகத்தில் தான் சாலை விபத்துகள் அதிகமா?
ஒரு உயிர் தேவையில்லாமல் போகக் கூடாது. 108 திட்டம் அறிவியுங்கள். மாநில அரசின் நிதியையும் சேர்த்துப் போடுங்கள்.
* எல்லாம் சரி, ஒரு ஆட்சி போனால் இதை எல்லாம் யார் பார்த்து பார்த்துச் செய்வார்கள்?
மருத்துவப் பல்கலைக்கழகம் அமையுங்கள். மருந்து, சோதனை, இதர சேவை எல்லாம் பார்த்துக்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அமையுங்கள்.
* எல்லா வசதியும் இருக்கு. ஆனால், மக்கள் எல்லாத்துக்கும் சென்னைக்கும் மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் அலைகிறார்கள்.
சரி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி தொடங்குங்கள்.
* மருத்துவச் சேவைக்கான கட்டமைப்பை உருவாக்கி விட்டோம். இன்னும் கூட சிறப்பாகச் செய்யலாம் , ஆனால் நிதி போதவில்லையே?
மாநில சுயாட்சி முழக்கத்தைக் கையில் எடு. மத்தியில் கூட்டணி ஆட்சி அமை. வேண்டிய வசதிகளைக் கேட்டு வாங்கு.
தமிழகத்தின் பொது மக்கள் நலத் துறை இந்தியாவின் முன்மாதிரி ஆகிறது. உலக சுகாதார நிறுவனம் முதற்கொண்டு பலர் நம் கொள்கைகளை ஆய்வு செய்கிறார்கள்.
2017. ஐம்பது ஆண்டுகள் இப்படிப் பார்த்துப் பார்த்து கொள்கைகளை வகுத்து, சட்டங்களை இயற்றி, திட்டங்களைத் தீட்டி, நிறுவனங்களை நிலை நாட்டி உருவானது தான் தமிழகத்தின் அரசு மருத்துவத் துறை என்னும் கோட்டை.
தொலைநோக்குப் பார்வையுடன் இவற்றைச் செயற்படுத்துவது தான் தலைவர்களின் பணி. இது தான் ஆட்சி. கள ஆய்வு என்ற பெயரில் திடீர் விசிட் அடித்து அதிகாரிகளைப் போட்டு மிரட்டுவது போன்ற stuntகள் முதல்வன் படத்தில் மட்டுமே எடுபடும். அடிப்படைச் சிக்கல்கள் என்ன என்று புரிந்து அவற்றைத் தீர்க்க முனைய வேண்டும்.
இது மற்றவர்களின் கண்ணை உறுத்துவதால் தான் நீட் என்ற பெயரில் ஒவ்வொரு செங்கலாக உருவத் தொடங்கி இருக்கிறார்கள்.
நாம் இன்னும் முதல்வர் ஏன் அரசு மருத்துவமனையில் போய் படுக்கவில்லை என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பார்க்க… முகநூல் உரையாடல்