கேள்வி: இலவச பஸ் பாஸ், மிதிவண்டி போன்று கல்விக்கு உதவும் அத்தியாவசிய திட்டங்களை எல்லாம் எதிர்க்கவில்லை. மிக்சி, கிரைண்டர், டிவி எல்லாம் ஆடம்பரம் தானே? அவற்றுக்குச் செலவிடத் தான் வேண்டுமா?
பதில்: அம்பானி மனைவி 5 நட்சத்திர விடுதியில் உண்பது ஆடம்பரம்.
ஆனால், அம்பானி மனைவி சமையலுக்கு மிக்சியும் கிரைண்டரும் பயன்படுத்துவது அத்தியாவசியம். ஆட்டாங்கல்லுக்குச் செலவிடும் நேரத்தில் அவர் பயனுள்ள இன்னும் பல வேலைகளைச் செய்ய முடியும்.
நம் அம்மாக்களுக்கும் இதே வசதிகள் கிடைத்தால் அவர்கள் நேரத்துக்கு உறங்க முடியும். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தர முடியும். தொலைக்காட்சியில் நான்கு செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும். அனிதாக்கள் இன்னும் கூடுதல் நேரம் ஒதுக்கி நான்கு மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற முடியும். ஸ்கூட்டி கொடுத்தால் பக்கத்தில் உள்ள நகரங்களுக்கு வேலை தேடிப் போக முடியும். அடுத்த தலைமுறையில் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயரும்.
நீங்கள் ஆடம்பர இலவசங்கள் என்று நினைப்பவை பலவும் பெண்களை அவர்கள் அடிமைத் தளையில் இருந்து நீக்கும் திட்டங்கள். பெண் செய்கிற வேலைகளை ஆண் செய்ய மாட்டோம் என்று திரியும் ஆணாதிக்க ஊரில் பெண்களின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கான திட்டங்களைத் தரத் தான் வேண்டும்.
என்னைக் கேட்டால் அடுத்து வரும் தேர்தல் அறிக்கையில் வாசிங் மெசின் இலவசமாகத் தர வேண்டும் என்பேன். பல பெண்கள் அதற்குத் தங்கள் வாழ்க்கையின் பொன்னான நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு என்ன இலவசமாகத் தரலாம் சொல்லுங்கள்.