நம்முடைய ரிசர்வ் வங்கியில் இன்றைய தேதிக்கு 430 பில்லியன் டாலர் அளவுக்குச் சொத்து இருக்கிறது. இந்தச் சொத்துகளின் அடிப்படையில்தான் பணம் அச்சடிக்கிறார்கள்.
இந்தச் சொத்து தங்கமாக, அன்னிய நாட்டுப் பணமாக, அரசு பத்திரங்களாக இருக்கும். இந்த 430 பில்லியன் டாலர் சொத்தின் மதிப்பு நிலையாக இருக்காது.
எடுத்துக்காட்டுக்கு, நீங்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீட்டை வாங்குகிறீர்கள். அதன் மதிப்பு சில வருடங்களில் 1.25 கோடி ரூபாயாக மாறுகிறதென வைத்துக்கொள்வோம். இதே மதிப்பு போன ஆண்டு ஒன்றாகவும் இந்த ஆண்டு வேறாகவும் இருக்கக் கூடும் அல்லவா? இது போல, ரிசர்வ் வங்கியின் சொத்து மதிப்பும் மாறும்.
அப்படி மாறும்போது, அதிகரிக்கும் மதிப்பு ஒரு கையிருப்பாக இருக்கும். இதற்குப் பெயர் முதன்மைக் கையிருப்பு. (Primary reserve)
அது தற்போது 6.91 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. ஆனால், இது கருத்தளவிலான கையிருப்பு மட்டுமே! (Book Reserve)
கருத்தளவிலான கையிருப்பு என்றால் என்ன?
மேலே சொன்ன 1.25 கோடி ரூபாய் வீடு இருக்கிறதே! அதை விற்றால் தானே 25 இலட்சம் லாபம் கையில் வரும்! விற்கும் போது என்ன விலைக்குப் போகும் என்று தெரியாதே!
அது போல், ரிசர்வ் வங்கியின் வசம் உள்ள சொத்தை விற்றால் தான் இந்தத் தொகை கையில் கிடைக்கும். அதுவரை, இது கருத்தளவிலான கையிருப்பு தான்.
இது தவிர, மெய்யாகவே கையில் கிடைத்த லாபம் ஒரு கையிருப்பாக இருக்கும். இந்த லாபம் தற்போது சுமார் 2.62 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
இந்த இரண்டு கையிருப்புகளும் சேர்ந்து மொத்தமாக சுமார் 9 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது.
இதில் கருத்து அளவிலான லாபத்தைக் கொடுக்க முன்னாள் RBI ஆளுநர் உர்ஜித் படேல் மறுத்து விட்டார். அதற்குப் பிறகுதான் சக்திகாந்ததாஸ் புதிய ஆளுநராக வருகிறார்.
இவர் ஆளுநராக வந்த பிறகு, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல்ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கிறார்கள்.
இந்தக் குழு, ரிசர்வ் வங்கியில் எவ்வளவு கையிருப்பு இருக்க வேண்டும், எந்த வகையில் இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.
இந்தக் குழுவினர் கருத்தளவிலான லாபத்தைத் தொடக்கூடாது என்று கூறிவிட்டார்கள். அதாவது, உர்ஜித் படேல் என்ன சொன்னாரோ அதையேதான் இவர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பதிலாக, வழக்கமாக சுமார் 31 % கையிருப்பாக இருக்கும் கருத்தளவிலான இலாபத் தொகை, தற்போது 20 % இருந்தால் போதுமெனக் குறைக்கப்பட்டிருக்கிறது.
அதற்குப் பிறகு, மெய்யாகவே கிடைத்த லாபத்தில் எவ்வளவு கொடுக்கலாம் என்பதை இந்த பிமல் ஜலான் குழு சொல்லியிருக்கிறது.
ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் 5.5 % முதல் 6.5 சதவீதம் தொகையை ரிசர்வ் வங்கி தன் கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். வழக்கமாக இந்தக் கையிருப்பு எப்போதுமே 10-11 % இருக்கும். இந்தக் கையிருப்பு அண்மைக்காலமாக குறைந்து வந்திருக்கிறது. ஏன் என்றால், ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக இதிலிருந்து ஈவுத் தொகையை எடுத்து மத்திய அரசுக்கு வழங்கி வந்தது. இந்த நிலையில் தான் இப்போது அந்த அளவை 5.5 % ஆகக் குறைத்திருக்கிறார்கள்.
இவை எப்படிப் பட்ட மாற்றம் என்றால், திருடன் நம்மிடம் பிக் பாக்கெட் அடிக்கக் கூடாது என்பது தான் சட்டம். ஆனால், நம்மிடம் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணம் இருக்கத் தேவையில்லை என்று புதுச் சட்டத்தைக் கொண்டு வந்து அந்தப் பணத்தை எல்லாம் திருடனுக்கு transfer செய்து விடுவதற்கு ஒப்பானது.
நம் பொருளாதாரம் மிகக் கடுமையானதாக மாறியிருக்கிறது.
அரசின் அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லை. இதைச் சமாளிக்க கடன் வாங்குகிறார்கள். அந்தக் கடன் ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாகச் செல்கிறது. இந்த வருடம் அரசு வாங்கியிருக்கும் கடன் 7.3 லட்சம் கோடி ரூபாய். 7 லட்சம் கோடி கடன் வாங்கி அதில் 6.6 லட்சம் கோடி வட்டி கட்டும் நிலை.
இது தவிர, பட்ஜெட்டிற்கு வெளியிலும் கடன் வாங்கியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, இந்திய உணவுக் கழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய மானியத்தை வழங்காமல், அவர்களை வெளியில் கடன் வாங்கச் சொல்கிறார்கள்.
இதையெல்லாம் சேர்த்தால் நம் உள்நாட்டு உற்பத்தியில் கடன் மட்டும் 6 % அளவுக்கு வருகிறது. மாநில அரசுகளின் பற்றாக்குறையையும் சேர்த்தால், கிட்டத்தட்ட 9 % வருகிறது. இது மிக மிக அதிகமான கடன் அளவு. இப்படியே பொருளாதாரம் எவ்வளவு நாளைக்குச் செல்ல முடியும்? வாங்கும் கடனில் மூன்றில் இரண்டு பங்கை அன்றாடச் செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது. இந்த ஆண்டு மத்திய அரசு செய்யும் முதலீட்டுச் செலவே 3.28 லட்சம் கோடி ரூபாய்தான்.
பிரதமர் அடுத்த ஐந்தாண்டுகளில் 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்கிறார். அப்படியானால் இந்த ஆண்டு 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மத்திய அரசின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே சுமார் 19 லட்சம் கோடிதான். இதில் எங்கிருந்து 20 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கும்?
முதலீட்டுச் செலவான 3.28 லட்சம் கோடி ரூபாயில் பெருமளவு ரயில்வே துறைக்குச் சென்றுவிடும். ரயில்வேயை விட்டுவிட்டால், அடிப்படைக் கட்டுமானத்தில் அரசு செலவழிக்கப்போவது மிகவும் சொற்பம்.
அடுத்ததாக GST. அதனை அவசரக் கோலத்தில் அமல்படுத்தியதால் அதில் பல பிரச்சனைகள். ஆகவே அதிலிருந்து எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் வரவில்லை. இதைச் சரிசெய்ய வேண்டுமானால் உள்நாட்டு உற்பத்தியைத் தான் கூட்ட வேண்டும். வரிவிகிதத்தை அல்ல.
பணம் இருக்கும் இடத்தில் வரி விதித்து வருவாயை அதிகரிக்கலாம் என நினைக்கிறார்கள். அது தவறு.
ஏற்கனவே பணமதிப்பிழப்பு, GST போன்றவற்றில் எப்படி தவறு செய்தார்களோ, அதே போன்ற தவறுதான் இப்போது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிவிதித்தது. இப்போது அதைத் திருத்த வேண்டிய கட்டாயம்.
இந்தியப் பொருளாதாரம் இதற்கு முன்பாகவும் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போது இதுபோல, ரிசர்வ் வங்கியிடமிருந்து இத்தனைக் கூடுதல் கையிருப்புத் தொகையை மத்திய அரசு வாங்கியிருக்கிறதா என்றால் இதுபோல எப்போதுமே நடந்ததில்லை.
இப்போது மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 1.76 லட்சம் கோடி ரூபாய், இந்திய அரசு சந்திக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளைச் சந்திக்க ஓரளவுக்காவது உதவுமா என்றால், அதுவும் இல்லை. நம் பிரச்சனைகளைப் பார்க்கும்போது இது மிகக் குறைவான தொகை.
இந்தத் தொகையை இரண்டு பகுதியாகப் பார்க்க வேண்டும்.
முதலாவதாக, கையிருப்பை 5.5 % ஆகக் குறைத்ததில் கிடைத்த உபரித் தொகை. இது 58,000 கோடி ரூபாய். வருவாயாகக் கிடைத்தது சுமார் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய். இதில் 90 ஆயிரம் கோடி ஏற்கனவே வருவாயாக பட்ஜெட்டில் காட்டப்பட்டு விட்டது. 28 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்கனவே காலாண்டு ஈவாக பிப்ரவரியிலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. ஆக, சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குத்தான் தற்போது கிடைக்கும்.
ஆக, 1.76 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பகுதி பட்ஜெட்டிலேயே காட்டப்பட்டுவிட்டது. மீதம்தான் இப்போது கிடைக்கும். இது எப்படி என்றால், எந்தக் கணக்கும் இல்லாமல் கூடுதலாக ரூபாய் நோட்டுகளை அடித்து விடுவதைப்போல. இதற்கு எந்த அடிப்படையும் இருக்காது. இது பணவீக்கத்தை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது.
ரிசர்வ் வங்கிக்கென சில பொறுப்புகள் இருக்கின்றன:
1. நிதி நிலைத்தன்மை (financial stability)
2. பணம் நிலைத்தன்மை (Cash stability)
3. செலாவணி தொடர்பான நிலைத்தன்மை (Expending stability and check on purchasing power)
இந்த மூன்றையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். இதில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அரசுக்கு இதுபோன்ற பொறுப்புகள் இல்லை. இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றத்தான் ரிசர்வ் வங்கிக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதைச் சீர்குலைக்கும் வகையில் அரசு நடந்துகொள்ளக்கூடாது.
பொருளாதாரத்தை வழிநடத்த தொழில்முறை வல்லுநர்கள் தேவை. அவர்கள் ஆலோசனைகளின் அடிப்படையில் தான் முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் தற்போது நல்ல பொருளாதார அறிஞர் இல்லை.
கடந்த எழுபதாண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அறிஞர்கள் பலர் பங்களிப்புச் செய்துள்ளனர். மொகல்நாபிஸ், கே.என். ராஜ், வி.கே.ஆர்.வி. ராவ், சுக்மாய் சக்கரவர்த்தி, மன்மோகன் சிங், கௌசிக் பாசு, ரகுராம் ராஜன் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்த அரசில் கூட, அரவிந்த் சுப்பிரமணியன், உர்ஜித் படேல், பனகாரியா போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.
மேலே சொன்னதுபோல பெயர் சொல்லக்கூடிய அறிஞர்கள் தற்போது அரசில் இல்லை.
அரசின் பணக் கொள்கை பொருளாதாரத்தை மேம்படுத்த பயனளிக்கவில்லை. ஆகவே இனி அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் GSTஐக் குறைக்கலாம். பெட்ரோல் மீதான வரிகளைக் குறைக்கலாம். விவசாயம் போன்ற கிராமம் சார்ந்த தொழில்துறைகளிலும் அடிப்படைக் கட்டுமானப் பணிகளிலும் செலவு செய்யலாம். ஆனால், இதையெல்லாம் செய்ய அரசிடம் நிதி இல்லை.
தனியார்கள் முதலீடுகளைச் செய்ய தயாராக இல்லை. தேவை தான் பிரச்சனை. உற்பத்தி முடங்கிப் போயிருக்கிறது. அரசு இந்த முடங்கி இருக்கும் சூழலில் தலையிட்டு நிலையைச் சூராக்க வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கின்றன.
இப்போது கிடைத்திருக்கும் பணத்தைக்கூட அவர்கள் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை.
பற்றாக்குறை முன்பின்னாக இருந்தாலும், இந்தப் பணத்தை அவர்கள் முதலீடு செய்ய வேண்டும். கிராமப்புற முதலீடுகளைச் செய்ய வேண்டும். யார் நுகர்வார்களோ அவர்களுக்குக் கொடுக்க வேண்டும். தொழில்துறைக்குக் கொடுக்கக்கூடாது. அவர்களிடம் ஏற்கனவே பெருமளவில் பணம் இருக்கிறது. அவர்கள் பொருளாதாரம் சீரடையட்டும் என எதிர்பார்த்திருக்கிறார்கள். சாதாரண மக்கள்தான் பல ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மிக மோசமான சூழலில் தான் இருக்கிறோம்.
**
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் எடுத்த பேட்டியின் அடிப்படையில் சற்றே மாற்றி எழுதிய கட்டுரை. வீடியோ பேட்டியும் கட்டுரையும் மறுமொழியில்.