நீங்கள் பயன்பெற்ற அரசின் மக்கள் நலத் திட்டங்கள் என்னென்ன?
எங்கள் வீட்டில்:
* கலைஞர் தந்த இலவச மின்சாரம் இல்லாவிட்டால் எங்கள் விவசாயம் என்றோ பொய்த்திருக்கும்.
* கலைஞர் தந்த இலவச பஸ் பாஸ் இல்லாவிட்டால், நான் +1, +2 மாவட்டத் தலைநகருக்குப் போய் படித்திருக்க முடியாது.
* கலைஞர் தந்த இலவச Gas அடுப்பு இல்லாவிட்டால் எங்கள் அம்மா வாழ்நாள் முழுதும் புகையில் செத்திருப்பார்.
* கலைஞர் தந்த இலவச தொலைக்காட்சி இல்லாவிட்டால் படிப்பறிவற்ற ஏழைகள், பெண்கள் உள்ள எங்கள் கிராமவாசிகளுக்கு உலக அறிவு வந்திருக்காது.
* அம்மா தந்த மிக்சியும் கிரைண்டரும் இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் அன்றாடம் இட்லியும் தோசையும் கிடைக்காது.
* என் தங்கைகள் இலவச மிதிவண்டியும் கணினியும் பெற்றிருக்கிறார்கள். கொஞ்சம் லேட்டாகப் பொறந்திருந்தால் இதெல்லாம் கிடைத்திருக்குமே என்று நான் வருந்தியதுண்டு. இதை எல்லாம் வாங்க எவ்வளவு அவமானமும் கஷ்டமும் பட்டோம் என்பது அனுபவித்தர்களுக்குத் தான் தெரியும்.
இது எல்லாம் நேரடியாக இலவசம் என்று தெரிந்து பெற்றவை.
நான் படித்த அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆண்டுக்கட்டணம் ~500 ரூபாய். அது மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி. இன்றளவும் என் உயர்வுக்கு வித்திட்டது அந்தப் பள்ளிக் கல்வியே.
நான் படித்த சென்னை அண்ணா பல்கலைக் கல்லூரிக் கல்விக்கு செமஸ்டர் கட்டணம் 7,000 ரூபாய் மட்டுமே. அதற்கே ஒரு முறை புளியங்காட்டை அழித்தும் உறவுப் பெண்களின் நகையை அடமானம் வைத்துத் தான் பணம் கட்டினோம்.
இந்தக் கல்விக்கு அரசு தரும் மானியம் இலட்சக் கணக்கில் செல்லும்.
இது போல் கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ வழிகளில் அரசு நம் வாழ்வை எளிமை ஆக்குகிறது.
பார்க்க… முகநூல் உரையாடல்