தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையில் தன் தந்தை வேலை பார்த்த அனுபவத்தை விநாயக முருகன் எழுதி இருக்கிறார். தவறாமல் அவரது பதிவில் உள்ள மறுமொழிகளையும் படியுங்கள். இணைப்பு மறுமொழியில்.
அரசாங்க அலுவலர் எல்லாம் இப்போ யார் வேலை பார்க்கிறார்கள் என்பதைப் போன்ற பொய் வேறு எதுவும் இல்லை. ஒரே ஒரு நாள் அரசு அலுவலர்கள் வேலையை நிறுத்தினால் கூட தமிழ்நாடு நிலைகுலைந்து விடும்.
**
எண்பதுகளில் தமிழ்நாட்டில் யானைக்கால் நோய் என்றொரு வியாதி இருந்தது. எங்கள் ஊரிலும் இந்த நோயால் பாதிக்கபட்டவர்கள் அதிகம் இருந்தார்கள். இந்த நோய் வந்தவர்களின் கால்கள் காலிபிளவர் போல வீங்கிவிடும். அவர்களை பார்க்கவே மிரட்சியாக இருக்கும். அந்த நோய் இப்போது தமிழ்நாட்டில் அறவே இல்லை. அதுபோல மலேரியா காய்ச்சல்,அம்மை நோய் கண்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அப்போது அதிகம். எனது பள்ளிக்கூடத்தில் படித்த சகமாணவர்களில் கணிசமானோர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். மற்ற வியாதிகளாவது பரவாயில்லை. இறந்துவிடலாம். போலியோ அப்படி இல்லை. காலம் முழுக்க மற்றவர்களை சார்ந்தே இவர்கள் வாழவேண்டும். போலியோ சிறுவர்களை அவர்கள் வீட்டிலிருக்கும் பெண்கள் இடுப்பில் தூக்கிக்கொண்டு வந்து எங்கள் பள்ளிக்கூடத்தில் விடுவார்கள். இப்போது நிலைமை மாறியுள்ளது. மற்ற மாநிலங்களை விட இன்று தமிழ்நாட்டில் ஓரளவு சுகாதார விழிப்புணர்வு அடைந்துள்ளோம். ஐம்பதாண்டுகளில் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று போகிறபோக்கில் சொல்லிவிட்டு செல்லமுடியாது. மறுக்கமுடியாத புள்ளிவிபரங்கள் உள்ளன.
இதற்கு எத்தனையோ பேர் சொல்லமுடியாத அளவு உழைப்பை கொட்டியுள்ளார்கள். அவர்களில் எனது அப்பாவும் ஒருவர். அவர் தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறையில் பணியாற்றியவர். மருத்துவர் இல்லை. ஆனால் மருத்துவக்குழுவை கண்காணிக்கும், அவர்களது வேலைகளை ஆடிட்டிங் செய்யும் அதிகாரி. அவரது வேலை மருத்துவர்களோடு கிராமம் கிராமமாக சென்று மக்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் ஒழுங்காக சென்று சேர்கிறதா , அரசு எவ்வளவு மாத்திரைகள் தருகின்றன? எவ்வளவு செல்வாகிறது? எவ்வளவு கையிருப்பில் உள்ளது போன்ற விஷயங்களை தணிக்கை செய்து மேலிடத்துக்கு அனுப்பும் வேலை. இது சள்ளைபிடித்த வேலைதான். ஆறுமாதங்களுக்கு மேல் ஓர் ஊரில் இருக்கமாட்டார். எனது அப்பா வேலை செய்த ஊர்கள் என்று பார்த்தால் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, பஞ்சாலங்குறிச்சி, மதுரை, மேலூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டிணம் , திருவண்ணாமலை, வேலூர் , கடலூர், செங்கல்பட்டு , சென்னை என்று போகும். இந்த ஊர்கள் எல்லாம் நான் பிறந்தபிறகு எனக்கு நினைவு தெரிந்து அவர் வேலை செய்த ஊர்கள். அதற்குமுன்பு அவர் தமிழ்நாட்டின் பல ஊர்களில் பணியாற்றியுள்ளார். இந்த வேலைகாரணமாகவே சிறுவயதில் ஒவ்வொரு ஊராக குடும்பத்தை அழைத்துச்செல்ல வேண்டியிருந்தது. பள்ளிக்கூடங்களை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும். ஒருக்கட்டத்தில் எல்லாரும் வெறுத்துப்போய் கும்பகோணத்திலே நிரந்தரமாக தங்கிவிட அப்பா மட்டும் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்தார். வருடத்துக்கு ஒரு மாதம் தொடர் விடுப்பு எடுத்துக்கொண்டு கும்பகோணம் வந்து தங்கிவிட்டு போவார்.
எனது அப்பாபோல அப்போது எண்ணற்ற அலுவலர்கள், மருத்துவர்கள் வீடு,வாசலை கூட கவனிக்காமல் சொந்தப்பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்காமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார்கள். அதான் செய்ற வேலைக்கு அரசு சம்பளம் தர்றாங்களே என்று கேட்கலாம். எந்த அடிப்படை வசதியும் இல்லாத கிராமங்களுக்கு, குறிப்பாக ஜீப் கூட செல்லமுடியாத காட்டுப்பகுதிகளுக்கு ஆபத்தான மலைக்கிராமங்களுக்கு எல்லாம் சென்று அங்கு மருந்து, மாத்திரைகளை விநியோகிப்பது சாதாரண வேலை இல்லை. அதை மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யவேண்டும். எத்தனையோ ஊர்களில் அலுவலர்கள் , மருத்துவர்கள் செல்லும் ஜீப் கவிழ்ந்து அவர்கள் விரல்கள் துண்டாகி சிலநேரங்களில் ஆளே இறந்துபோய் தூக்கிவந்த சம்பவங்கள் எல்லாம் கேள்விப்பட்டுள்ளேன். விபத்துக்களை நேரிலும் பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் இந்தளவு சாலை வசதி இல்லை. செல்போன், கணிப்பொறி இல்லை. ஒவ்வொருநாளும் பக்கம் பக்கமாக மருந்து பேப்பர்களை, டைப்ரைட்டிங் பேப்பர்களை, மலைபோன்று குவியும் கோப்புகளை சரிபார்க்க வேண்டும். எனது அப்பாவின் அலுவலகம் உள்ளே சென்றால் மழைபெய்வதுபோல டைப்ரைட்டிங் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஊருக்கெல்லாம் சுகாதார மருந்துகளை விநியோகித்த என் அப்பா வேலைப்பளு , தொடர் அலைச்சல் காரணமாக ஒழுங்காக குடும்பத்தை கவனிக்காமல் அதீத மனஅழுத்தம் வந்து குடித்து குடித்தே கடைசி காலத்தில் பக்கவாத நோய் வந்து ஆறுமாதங்கள் படுக்கையில் கிடந்தே இறந்துபோனார். அவரைப்போல எத்தனைப்பேர் தமிழ்நாட்டில் இறந்தார்களோ? ஊரில் இவர்களுக்கு எஞ்சும் இரண்டே பெயர்கள் மலேரியா ஆபீசர், கொசு மருந்து அடிக்கறவன். பேண்ட் சட்டை அணிந்து அதிகாரியாக பணியாற்றினால் அவர்களுக்கு மலேரியா ஆபீசர் என்றும் கீழ்மட்ட ஊழியர்களுக்கு கொசு மருந்து அடிக்கறவன் என்றும் பெயர் சூட்டி அழைப்பார்கள். எண்பதுகளில் தமிழ்நாட்டில் பெரியம்மை, போலியோ, யானைக்கால், மலேரியா காய்ச்சலை ஒழிக்க பெரிய போராட்டமே நடந்தது. எண்ணற்ற அரசு ஊழியர்கள் த/அ (தமிழ்நாடு அரசு என்பதன் சுருக்கம்) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மாத்திரைகளை, கொசுமருந்து கேன்களை முதுகில் சுமந்து தமிழ்நாட்டின் வரைபடமெங்கும் ஓயாமல் குறுக்கு, நெடுக்காக பயணித்தார்கள். தமிழ்நாடு பொதுசுகாதாரத்துறைக்கென்று ஒரு வரலாறு உள்ளது.
இந்த வரலாறு எதுவும் தெரியாமல் பாரிசாலன், ஹீலர் பாஸ்கர் போன்றோரின் அரைகுறை பேச்சை நம்பி அறிவுக்கெட்ட மடையர்கள் சிலர் வாட்ஸப்பில் எல்லாம் தெரிந்ததுபோல அடித்துவிடுகிறார்கள். நேற்று இரவுக்கூட ஒரு யூட்யூப் வீடியோ பார்த்தேன். அதை லட்சம் பேர் பார்த்து பாராட்டியுள்ளார்கள். போலியோ போன்ற நோயை இலுமினாட்டிகள் பரப்பி பிறகு அவர்களே அதை குணப்படுத்தினார்கள் என்று சொல்வதெல்லாம் வேற லெவல். கையில் ஒரு செல்போன் இருந்தால் எதைப்பற்றியும் கருத்து சொல்லலாம். இதுபோன்ற பிரச்சாரம் செய்ய தடித்த எருமைத்தோல் வேண்டும். ஒழுங்கான படிப்பு இல்லை. சுயசிந்தனை இல்லை. சுயசம்பாத்தியம் இல்லை. எந்த வேலைவெட்டிக்கும் போறது இல்லை. அதையும் கைத்தட்டி ரசிக்க ஒரு கூட்டம்.
– Vinayaga Murugan
பார்க்க… முகநூல் உரையாடல்