நேர்முகம் காணும் ஒருவர் கலைஞரிடம் தங்களுக்கு இலக்கியத்தில் பிடித்த பாத்திரம் எது என வினவுகிறார். வந்த பதில்: மணிமேகலையிடம் இருந்ததாகச் சொல்லப்படுகிற அட்சய பாத்திரம்.
நில உடைமையிலிருந்த ஏற்றத்தாழ்வு, சாதியப் படிநிலை ஆகியவற்றால் மக்களில் பெரும்பான்மையானோர் தங்களது உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொள்ளப் பெரும் போராட்டம் நிகழ்த்தினர். பஞ்சமும் பட்டினியும் வாடிக்கையான ஒன்று. இதனை மாற்றியமைக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் பசுமைப் புரட்சி. இதற்கு முன்பே திமுக உணவு அரசியலை முன்னெடுத்தது.
1967 தேர்தலில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையே உணவை மையப்படுத்தித்தான் இருந்தது. பசுமைப் புரட்சி முழு வடிவம் பெறும் முன்னர் ஆட்சியைப் பிடித்த திமுக, தனது ‘படி அரிசி’ திட்டத்தைச் செயல்படுத்த முடியாத நிலையை உணர்ந்தது. அதற்குத் தேவையான பணமும் இல்லை; உணவு தானியமும் இல்லை. ஆகவே இத்திட்டம் சிறிய அளவிலேயே செயல்படுத்தப்பட்டது.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கலைஞர் முதல்வராகிறார். வறட்சியின் காரணமாக உணவுப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனைச் சமாளிக்க ஒன்றியத் தொகுப்பிலிருந்து தேவை. ஆனால், ஒன்றியத்தை ஆண்ட காங்கிரஸ் உணவு வாயிலாக ஆளும் திமுகவுக்குக் குடைச்சல் கொடுக்க, பற்றாக்குறை காலத்தில் எல்லாம் கேட்ட உணவை ஒதுக்கித்தராமல் தங்கள் வலிமையைக் காட்டி வந்தனர்.
இதற்கு என்ன மாற்று என்று யோசித்த கலைஞர், இந்திய உணவுக் கழகம் போன்ற அமைப்பைத் தமிழகத்தில் தோற்றுவித்தார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அப்படித்தான் உருவானது. வாணிபக் கழகமும் விவசாயிகளிடம் நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்யத் தொடங்கியது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லைச் சேமித்து வைக்க கிடங்குகள் கட்டப்பட்டன. நெல்லை அரிசியாக மாற்ற நவீன அரிசி ஆலைகள் உருவாக்கப்பட்டன. போக்குவரத்தை உறுதி செய்யப் பொருள் போக்குவரத்துக் கழகம் தொடங்கப்பட்டது.
உணவு உற்பத்தியை அதிகரிக்க அதிக நீர்வளத்தை உருவாக்க முடியாத சூழலில் இருந்த தமிழகம் மின் வசதியை அனைத்துக் கிராமங்களுக்கும் இதே சமயத்தில் கொண்டு சென்றது. இதன் விளைவே ’பம்பு செட் புரட்சி’ என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படும் பயிர் பரப்பின் விரிவாக்கம். அதே சமயத்தில் தீவிர சாகுபடித் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாகவே, தமிழகம் மூன்று நான்கு ஆண்டுகளில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், அதனைக் கொள்முதல் செய்யவும் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டது. ஆனால் அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கத் தேவையான அமைப்பையும் உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் அதுவரை தேவையேற்படும்போது மட்டும் (பஞ்சம் மற்றும் தட்டுப்பாடு காலங்களில்) நகர்ப்புறங்களில் மட்டும் அதுவும் கோவை, சென்னை நகரங்களில் மட்டுமே மக்களுக்கு உணவு தானியம் விநியோகத் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்தது. இதனை மாற்றியமைக்க முடிவு செய்தார் கலைஞர். 1974ஆம் ஆண்டு தமிழகம் எங்கும் கணக்கெடுக்கப்பட்டுக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. TNSCயும் கூட்டுறவுகளும் நியாய விலைக் கடைகளை நிறுவப் பணிக்கப்பட்டன. இதற்கிடையே TNSC மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இவ்வாறாக, தமிழக பொது விநியோகத் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் 1971-76 காலத்தில் கலைஞர் நிறுவி முடித்தார். இந்த அடிக்கட்டமைப்பு, பின்னர் வந்த எம்ஜிஆர் காலத்திலும் விரிவாக்கப்பட்டது. உணவுத் துறை தலையாய துறைகளில் ஒன்றாக மாறியது. இருந்தபோதிலும் தேவைப்படும் அனைவருக்கும் உணவு தானியம் சென்று சேர்வதில் பல சிக்கல்கள் நிலவிவந்தன. குறிப்பாக, கூலி மட்டம் குறைவாக இருந்ததால் குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட பொருட்களை வாங்கச் சாமானியர்கள் சிரமப்பட்டனர்.
கலைஞர் அடுத்துச் செயல்படுத்திய புரட்சி மகத்தானது. அதுதான் 2006ஆம் ஆண்டு செயல்படுத்திய கிலோ 2 ரூபாய்க்கு அரிசித் திட்டம். குடும்ப அட்டை வைத்திருந்த அனைவரும் மாதம் 20 கிலோ அரிசியை 40 ரூபாய்க்குப் பெறலாம் என்ற அந்தத் திட்டம் சாமானியர்களின் உணவுப் பற்றாக்குறையை முற்றிலும் நீக்கியது. சில ஆண்டுகளிலேயே அரிசியின் விலையை 1 ரூபாயாகக் குறைத்தார் கலைஞர். பின்னர் அது முற்றிலும் இலவசம் என்றானது ஜெயலலிதா காலத்தில்.
உணவுக்காக ஆண்டைகளையும் நில உடைமையாளர்களையும் நம்பியிருந்த சூழலை இது முற்றிலும் மாற்றியமைத்தது. அதன் வாயிலாக உழைக்கும் மக்களின் உழைப்பையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நில உடைமை வர்க்கம் தனது பிடியை முற்றிலும் இழந்தது. தமிழகம் புதிய வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
உணவு உற்பத்தியை உறுதி செய்தால் மட்டும் பட்டினியைக் களைந்துவிட முடியாது. அது பசித்தவனின் தட்டுக்குச் சோறாகச் சென்றுசேர வேண்டும். அப்போதுதான் அவனது பசித் தீ தணியும்; ஆறும். இவை அனைத்தையும் ஒருங்கே செய்த சாதனை கலைஞருக்குச் சொந்தமானது. உணவின் மூலம் உழைக்கும் கைகளை விலங்கிட்டு வைத்திருந்ததை மாற்றியமைத்தார் அவர்.
ஆக, கலைஞர் தமிழக உழைக்கும் மக்களின் விலங்கை உடைத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்கும் வெளியை உருவாக்கிச் சென்றுள்ளார். ’மணிமேகலையின் கையிலிருந்ததாகச் சொல்லப்பட்ட அட்சய பாத்திரம் என்னைக் கவர்ந்த பாத்திரம்’ எனக் கூறியதன் முழு விரிவும் இப்போது புரிகிறதல்லவா?
அவர் செயல்படுத்தியவையெல்லாம் அவர் தமது சமூகத்தின் மீது கொண்டிருந்த அக்கறை மட்டுமன்று; அந்தச் சமூகம் என்னவாக இருக்கிறது, என்ன செய்தால் என்னவாக மாறும் என்ற புரிதல் அவருக்கு இருந்ததை இது உணர்த்துகிறது.
தனது வாழ்நாளில் தனக்குக் கிடைத்த அதிகார மையை அவரால் எப்படிப் பயன்படுத்த முடிந்திருக்கிறதென புரிந்துகொள்ளும்போது அவரின் சமுதாயப் பங்களிப்பை எண்ணி வியக்கிறேன்.
சுயமரியாதை இயக்கத்தின் போர்ப்படைத் தளபதிதான் கலைஞர். அவரது எண்ணம், செயல் என அனைத்தையும் சுயமரியாதைச் சுடரேந்திதான் அவர் அணுகினார். அதன் ஒரு வெளிப்பாடுதான் அவரது நவீன மணிமேகலை அவதாரம்.
கட்டுரையை எழுதியவர்:
ஜெ.ஜெயரஞ்சன், பொருளாதார ஆய்வாளர்.
பார்க்க… முகநூல் உரையாடல்