கேள்வி: ஏழைகள் வாழவே கூடாதா? சாதி அடிப்படையில் நீங்கள் கொடுக்கிற 69% இடங்களை எல்லாம் பணக்காரர்களே அள்ளிப் போக மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
பதில்: இது ஒரு நல்ல கேள்வி (கேட்டது நான் தான் 🙂 )
இந்தியாவில் சாதி அடிப்படையில் தான் ஏழ்மை அமைந்திருக்கிறது என்பதைப் பல முறை விளக்கி விட்டேன்.
ஒவ்வொரு சாதிக்குள்ளும் இருக்கும் ஏழைகளை ஐயம், திரிபு அற சுட்டும் குறிகாட்டிகள் (Poverty indicators) யாவை?
* ஒருவர் தமிழ் வழிய மாணவரா? அவர் ஏழ்மை காரணமாக தனியார் ஆங்கிலக் கல்வி பெறாமல் அரசுப் பள்ளியில் படித்தவராக இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு அரசுப் பணியில் 20% உள் இட ஒதுக்கீடு உண்டு. தந்தவர் கலைஞர்!
* ஒருவர் பெண்ணா? முதல் தலைமுறையாக முட்டி மோதி படித்து வரும் ஏழ்மையில் வாடி இருக்க வாய்ப்பு உண்டு. வேலைக்கு வரும் பெண் தனியாக குடும்பத்தை நடத்தும் கடமையும் இருக்கலாம். அவர்களுக்கு அரசுப் பணியில் 30% உள் இட ஒதுக்கீடு உண்டு. தந்தவர் கலைஞர்!
* ஒருவர் கைம்பெண்ணா? மாற்றுத் திறனாளியா? அவருக்கு வேறு வேலைவாய்ப்புகள் இன்றி, குடும்பத்தினர் உதவியும் இன்றி வறுமையில் வாட வாய்ப்புண்டு. அவர்களுக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு உண்டு.
* இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சாதிகளைக் காட்டிலும் இசுலாமியர் செல்வ நிலை மோசம். அவர்களுக்கு 3.5% உள் ஒதுக்கீடு உண்டு.
* பட்டியல் இனத்தவரிலேயே அருந்ததியர் நிலமும் இன்று நல்ல வேலையும் இன்றி வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு 3% உள் ஒதுக்கீடு உண்டு.
* ஒருவர் முதல் தலைமுறைப் பட்டதாரியா? அவர் ஏழையாக இருக்க கூடுதல் வாய்ப்புண்டு. அவர்களுக்குப் போட்டித் தேர்வில் கூடுதலாக 5 மதிப்பெண் தரும் நடைமுறையைக் கலைஞர் கொண்டு வந்தார். நீதிமன்றம் தடை செய்தது.
* ஒருவர் கிராமப்புற மாணவரா? அவர் ஏழையாக இருக்க கூடுதல் வாய்ப்புண்டு. அவர்களுக்குப் 15% உள் இட ஒதுக்கீட்டைக் கலைஞர் கொண்டு வந்தார். நீதிமன்றம் தடை செய்தது.
* எல்லாவற்றுக்கும் சிகரமாக, நுழைவுத் தேர்வுக்குத் தனிப் பயிற்சி போக முடியாமல் ஏழைகள், கிராமப் புற மாணவர்கள், பெண்கள் சிரமப்படுகிறார்களா? அந்த நுழைவுத் தேர்வையே ஒழித்துக் கட்டி +2 மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி நுழைவுக்கு ஏற்பாடு செய்தவர் கலைஞர்.
ஒருவர் பெண்ணாகவோ மாற்றுத் திறனாளியாகவோ முதல் தலைமுறைப் இசுலாமியராகவோ போலிச் சான்றிதழ் பெற முடியாது. எனவே, வருமானத்தின் அடிப்படையில் பெறப்படும் ஏழ்மைச் சான்றிதழைக் காட்டிலும் இவை மிகச் சிறப்பான வறுமை குறிகாட்டிகள்.
இப்படி காலத்துக்கு ஏற்றவாறு இட ஒதுக்கீட்டில் தக்க மேம்பாடுகள் செய்து கல்வி, வேலை வாய்ப்புகள் ஏழைகள் உட்பட அனைத்துப் பிரிவினரையும் சென்றடையுமாறு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதனால் தான் சொல்கிறோம்:
டேய் நீங்க படிக்கிற Schoolல நாங்க Headmaster டாவ்வ்வ்!
பார்க்க… முகநூல் உரையாடல்