கேள்வி: எல்லாம் சரி. ஏழைகள் எங்கே போவார்கள்? அவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாமா?
பதில்:
இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமோ வேலை வாய்ப்புத் திட்டமோ அன்று.
நாட்டில் ஒரே ஒரு வேலை, படிப்பு இடம் இருந்தாலும் அதனை எப்படி அனைத்துச் சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஒதுக்குவது என்பதை முடிவு செய்யத் தான் இட ஒதுக்கீடு.
ஒரே ஒரு ஏழைக்கு இடம் ஒதுக்கி நாம் வறுமையை ஒழிக்க முடியாது.
உண்மையிலேயே ஏழைகளைப் பற்றிக் கவலைப்படுவோர், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஏழைகளின் வறுமையை நீக்கத் திட்டங்கள் இயற்ற வேண்டும்.
அவர்கள் செய்ய வேண்டியன மூன்று:
1. ஏழைகளுக்கான செலவுகளைக் குறைக்க வேண்டும்
கல்வி, மருத்துவம், உணவு, போக்குவரத்து முதலிய அடிப்படைச் சேவைகளின் விலையைக் குறைக்க வேண்டும். முடிந்தால் இலவசமாகவே தர வேண்டும். இவை பெயருக்கு ஒன்றிரண்டாக இல்லாமல் மாநிலம் / நாடு தழுவிய அளவில் இருக்க வேண்டும்.
2. ஏழைகளுக்கு வருமானத்தைப் பெருக்க வேண்டும்
தனியார் துறை உள்ளிட்ட தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள், நகர் மயமாக்கம், ஊர்ப்புறப் பொருளாதாரம், பணச் சுழற்சி ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.
3. ஏழைகள் சமமாகப் போட்டியிட முட்டுக்கட்டையாக உள்ள முறைகளை ஒழிக்க வேண்டும்
நீட் வந்தால் ஏழைகள் போட்டியிட முடியாது. அதற்கு ஈடாக ஒரு சில ஏழைகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு தர வேண்டுமா? இல்லை, அனைத்து ஏழைகளும் பங்கேற்கக் கூடிய வகையில் +2 மதிப்பெண் மட்டும் போதும் என்று நுழைவுத் தேர்வை ரத்து செய்வதா?
உண்மையில், இட ஒதுக்கீட்டை வறுமை ஒழிப்புக்கான ஒரு தீர்வாகக் கூறுவோர் ஏழைகள் மீது அக்கறை கொண்டு நல்ல திட்டங்களைத் தீட்டுவதில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு தான் வறுமை ஒழிப்பிலும் மற்ற பல மாநிலங்களை விட முன்னணியில் உள்ளது.
வறுமை ஒழிப்பும் இட ஒதுக்கீடும் ஒன்றுக்கு ஒன்று முரணானது அன்று.
பார்க்க – முகநூல் உரையாடல்