பதில்:
ஒரு ஊரில் ஒரே ஒருவருக்குத் தான் போலியோ தாக்கும். அது யாரென்று நமக்குத் தெரியாது. அவரைக் காக்க வேண்டும் என்றால் ஊரில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து தரத் தான் வேண்டும்.
புண்ணியம் வேண்டும் என்று கோயிலில் அன்னதானம் செய்கிறோம். பணக்காரன் எல்லாம் சாப்பிட வராதே என்று விரட்டி விடுகிறோமா?
உறவினர், நண்பர் வயிறார உண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று தான் திருமணத்தில் விருந்து வைக்கிறோம். உணவு வீண் ஆனாலும் பரவாயில்லை என்று கூடுதலாகவே சமைக்கிறோமா இல்லையா?
அதே போல் தான், தேவையில்லாத நான்கு பேருக்கு உதவிகள் சென்றாலும் பரவாயில்லை என்று அனைவருக்கும் மக்கள் நலத் திட்டங்களைச் செயற்படுத்துகிறோம்.
நீ ஏழை என்று நிறுவ வருமானச் சான்றிதழ் வாங்கி வா என்று சொன்னால்,
அவர் VAO, Revenue officer, வட்டாட்சியர் என்று பல அலுவலகங்களுக்கு பல முறை அலைய வேண்டும். இந்த வருமானச் சான்றுகள் 6 மாதம் தான் செல்லும். மீண்டும் இன்னொரு திட்டத்தில் பயன்பெற இந்த அலுவலகங்களுக்கு மீண்டும் அலைய வேண்டும். பேருந்துக்குக் காசு கொடுக்க வேண்டும். பல நாள் வேலைக்கோ பள்ளிக்கோ செல்லாமல் விடுப்பு எடுக்க வேண்டும்.
சில வேளை, உள்ளூர் அரசியல்வாதிக்கும் அரசு அலுவலருக்கும் இலஞ்சம் கூட கொடுக்க வேண்டி வரலாம். மேல் மட்டத்தில் ஊழலை ஒழிக்கிறோம் என்று கீழ் மட்டத்தில் இலஞ்சம் பெருக்க வழி வகுப்போம். அதைக் கண்காணிக்கவும் முடியாது.
ஒருவரின் செல்வநிலை என்பது நிலையற்றது.
இந்த மாதம் வியாபாரியாக இருப்பவர் அடுத்த மாதம் நடுத்தெருவுக்கு வரலாம். அவர் சான்றிதழ் வாங்கும் வரை அவர் வீட்டில் அரிசி பொங்க வேண்டும்.
நம்முடைய நோக்கம் காசை மிச்சப்படுத்துவது அல்ல. தேவை உள்ள ஒருவருக்குக் கூட உதவி கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பது தான்.
இத்தனைக்கும் நாம் ஊடகங்கள் சொல்வது போல் வாரி இறைத்து விடுவதில்லை. ஒரு பெண் திருமண உதவி பெற வேண்டும் என்றால் +2 வரை படிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் மட்டும் தான் மிதிவண்டிகள், மடிக்கணினிகள் பெற முடியும். Program Management மொழியில் சொல்வது என்றால் Objective, scope, theory of change, output, outcome எல்லாம் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட திட்டங்களைத் தான் தமிழக அரசு செயற்படுகிறது.
இந்த Universal Welfare என்பது தான் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் என்று உலகம் முழுக்க உள்ள பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள். அதை இயல்பாகவே செயற்படுத்துவது தான் நமது மேதைமை.
இணைத்துள்ள வீடியோவில் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் கூறுவதை ஒரு நிமிடம் விடாமல் கேளுங்கள்.