• Skip to primary navigation
  • Skip to main content

Dravidianism

திராவிடம் இனிது!

  • இட ஒதுக்கீடு
  • கலைஞர்
  • திராவிடம்
  • நீட்
  • வளங்கள்
You are here: Home / திராவிடம் / இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம்

இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம்

November 28, 2018

“இன்றைக்கு நாட்டில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழகம். திராவிடக் கட்சிகள் இல்லாமல் இது சாத்தியம் இல்லை.

1967-ம் ஆண்டுக்குப் பிறகு, சமூகநலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் முதல்வரான அண்ணாதுரை மாற்றினார். அதுவரை மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுதான் வழக்கம். அண்ணாதுரை தலைமையிலான ஆட்சியில்தான், கீழிருந்து மேல் நோக்கித் திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், பின்தங்கி இருப்பவர்களை முன்னேற்ற, நல்வாழ்வுத் திட்டங்களைத் தீட்டப்பட்டன. அதனால்தான் ஏழைகள் பற்றிப் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட, ஆளும் மாநிலங்களைவிட, தமிழகம் முன்னேற்றம் கண்டது. கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு என அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முன்னணியில் இருக்கிறது.

அண்ணாதுரை ஆட்சியின் தொடர்ச்சியாக, 1969-ம் ஆண்டு, கருணாநிதி முதல்வரானதும் மாநில நிர்வாகத்தின் பார்வையும் போக்கும் மேலும் மாறியது. பிரச்னைகளை அதிகாரிகள் தீர்ப்பதற்குப் பதிலாக, உள்ளூர் கட்சிக்காரர்கள் சொன்னால், அதற்கு அதிகாரவர்க்கம் காதுகொடுக்க வேண்டியிருந்தது. இது பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க உதவியது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நிலச்சுவான்தார்கள் ஆதிக்கம் ஒழிந்தது. இப்படி, கிராம அளவில் கருணாநிதி புரட்சியை ஏற்படுத்தினார்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுகாதாரம், தொழில்நுட்பக் கல்வி, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி போன்ற திட்டங்களைக் கொண்டுவந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். தமிழகத்தில் இருந்து பார்க்கும்போது, இதெல்லாம் சாதாரணமாகத் தெரியும். பிற மாநிலங்களுக்குச் சென்றுபாருங்கள். அப்போதுதான், தமிழகத்தின் வளர்ச்சி புரியும்.

ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மக்கள் என மூன்று தரப்பும் ஒன்றிணைத்து இங்கு திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். அதனால்தான், வெற்றி கிடைக்கிறது. அரசியல் கட்சிகளின் நிர்வாகக் கட்டமைப்பு, இங்கு வலுவாக உள்ளது. அரசுப் பணியில் உள்ள பெரும்பாலோர் பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். மக்களின் பிரச்னைகளை, தேவைகளை அறிந்தவர்கள் அவர்கள். எனவே, மற்ற மாநில அரசு இயந்திரங்களுடன் ஒப்பிடுகையில், தமிழக அரசு இயந்திரம் நன்றாகவே இயங்குகிறது.

தேசிய அளவில் மாநிலங்களின் ஆட்சி நிர்வாகங்களைப் பார்க்கும்போது, 1967 – 2017 வரையிலான திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம், தமிழகத்தின் வளர்ச்சிக் காலம்.’’

– ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி நாராயண்.

(செய்தி இணைப்பு )

பார்க்க… முகநூல் உரையாடல்

Filed Under: திராவிடம்

Copyright © 2024 · Dravidian Books . திராவிடர் மன்றம் · Log in

1850