கேள்வி: அரசு சேவைகள் ஏன் தனியார் அளவுக்குத் தரம் வாய்ந்ததாக இல்லை?
பதில்: வசதி என்பதைத் தான் தரம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதால் கேள்வியே தவறு.
அரசு சேவைகள் தேவையின் அடிப்படையில் அமைந்தவை.
எடுத்துக்காட்டுக்கு, ஒரு சின்ன கிராமத்துக்குப் பேருந்து வசதி இல்லை என்றால் காலை மாலை இரு வேளை மட்டும் பேருந்து விடுவார்கள். அது வருகிற நேரம் வரை பொறுத்து இருந்து ஏற வேண்டும். ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே என்பதால் கூட்ட நெரிசல் இருக்கலாம். சில நாட்கள் சாலை சரி இல்லை என்றாலோ பேருந்து பழுது என்றாலோ நடந்து வேறு ஊருக்குப் போக வேண்டும்.
அன்றாடம் அந்தப் பேருந்தைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இது எல்லாம் வசதிக் குறைவு இல்லை. ஏன் என்றால், இந்தப் பேருந்துத் தடம் வருவதற்கே அவர்கள் விடுதலை பெற்று 50 ஆண்டுகள் காத்து இருந்தார்கள். ஆளே இல்லாவிட்டாலும் இந்தப் பேருந்து வரும், தங்கள் பிள்ளைகளை இலவசமாகப் பள்ளிக்கு ஏற்றிச் செல்லும் என்று அவர்களுக்குத் தெரியும்.
இப்போது இதே ஊருக்கு நீங்கள் நகரத்தில் இருந்து போகிறீர்கள். என்னடா, இவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது, அடிக்கடி பேருந்து விட்டால் தான் என்ன, இந்த வெயிலுக்கு ஏசி போட்ட பேருந்து இருந்தால் நன்றாக இருக்கும், இதற்குக் காத்திருப்பதற்கு ஒரு வாடகை கார் எடுத்துப் போய் விடலாம் என்று நினைக்கிறீர்கள். இது நீங்கள் எதிர்பார்க்கும் வசதி.
இது போல் அரசு மருத்துவமனையில் கூட்டம் இருக்கிறது, தூய்மையாக இல்லை என்பது எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் தான்.
இந்த வசதிகளை எல்லாம் அரசால் செய்ய முடியும். ஆனால், ஒரு ஊருக்குக் கூடுதல் வசதி செய்வதை விட, அதே நிதியில் பேருந்தே இல்லாத இன்னொரு ஊருக்குப் புதிதாக சாலை போட்டு, பேருந்து விடுவது கூடுதல் மக்களுக்குப் பயன் அளிக்கும் என்றால் அரசு அந்த முடிவு தான் எடுக்கும். மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் அடிப்படை வசதிகளைக் கொண்டு சேர்த்த பிறகு, அடுத்த கட்டமாகப் புதிய வசதிகளைத் தரும்.
நகரங்களில் வசதி தேவைப்படுவோருக்கு அதுவே சொகுசுப் பேருந்து, ஏசி பேருந்து எல்லாம் அமைத்துத் தரும். ஆனால், நகரத்தில் உள்ள ஏழைகள் வசதிக்காக குறைந்த விலை White board சேவைகளையும் இயக்கும்.
அரசு இயங்கும் மாதிரி இது தான்.
ஒரு பேருந்து விபத்து இல்லாமல் சொன்ன நேரத்துக்கு இலக்கைச் சென்றடைகிறதா என்பது மட்டும் தான் இங்கு தரமாக இருக்க முடியும். மற்றது எல்லாம் காசுக்கேற்ற தோசை தான். ஒரு தனியார் பேருந்தில் விபத்து ஏற்பட்டால் இன்னொரு தனியார் நிறுவனத்தை நாட நாம் தயங்குவது இல்லை.
ஆனால், ஒரு இடத்தில் அரச சேவையில் குறை ஏற்பட்டால் ஒட்டு மொத்த அரசுத் துறையே மோசம் என்று தனியாருக்குத் தாவுகிறோம். இது நாளடைவில் அரசு துறையை நலிவடையச் செய்து அதனை இழுத்து மூடும் நிலைக்கு இட்டுச் செல்லும். படிக்க மாணவர்கள் இல்லை என்று பள்ளிகள் மூடப்படுவது இப்படித் தான். இறுதியில் என்ன ஆகும்? தனியாரில் விலை கூடும். பாடு பட்டு பெற்ற இட ஒதுக்கீட்டு உரிமை இருந்தாலும் அரசுத் துறையில் வேலை வாய்ப்பு குறையும்.
கல்வி, மருத்துவம் என்று எந்தத் துறையானாலும் அரசு சேவையைக் குறை சொல்லும் முன் நீங்கள் கூறும் தரம் என்பது அடிப்படைச் சேவையா இல்லை கூடுதல் வசதியா என்பதை எண்ணிப் பாருங்கள்
பார்க்க… முகநூல் உரையாடல்