பதில்: இதயம் பலகீனமானவர்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம்.
அதிமுக என்பது என்ன?
1949ல் தொடங்கிய திமுக, 1972ல் பிளவுற்று அதிமுக பிறக்கிறது.
அதிமுகவின் அடித்தளம் 23 ஆண்டுகள் திமுகவிலும் அதற்கு முன்பு திராவிட இயக்கத்தின் மீதும் கட்டமைக்கப்பட்டது.
பெரியார் என்னும் மருந்தைத் திமுக தேன் தடவித் தருகிறது என்று அறிஞர் அண்ணா சொன்னார்.
அந்த மருந்தில் நிறைய தண்ணீர் கலந்த பானம் தான் அதிமுக.
ஆனால், அது ஒரு போதும் பாலில் விசம் கலக்கும் சங்கி வேலையைச் செய்யாது.
அதிமுகவுக்கு மக்களுக்கு நன்மை செய்யும் துணிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரு போதும் தீமை செய்ய முனைந்தது இல்லை.
கலைஞருக்குப் பெயர் வரக்கூடாது என்று சில திட்டங்களை அவர்கள் கை விட்டிருக்கலாம்.
ஆனால், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுவது, இட ஒதுக்கீடு, மதிய உணவு, ரேசன் விநியோகம் போன்றவற்றில் முந்தைய திமுக செய்ததை விடாமல் விரிவாக்கினார்கள். அதனாலும் தான் தமிழகம் நன்றாக இருக்கிறது.
மக்களுக்கு நன்மையே செய்யக்கூடாது என்பது அதிமுக நிலைப்பாடு இல்லை. அதைத் தாங்கள் தான் செய்ய வேண்டும், மீண்டும் மீண்டும் அதிகராத்துக்கு வர வேண்டும் என்பது தான் அவர்கள் குறி. கிரீமி லேயர் அறிமுகம், கோயில்களில் ஆடு கோழி வெட்டத் தடை போன்ற மக்களுக்கு எதிரான முடிவுகளை எல்லாம் தேர்தலில் தோற்றவுடன் உடனே திருத்திக் கொண்டார்கள்.
திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இருப்பது பங்காளிச் சண்டை. யார் பெயர் வாங்குவது என்ற போட்டி இருக்கும். ஆனால், ஒரு நாளும் பெற்றவர்களோ குழந்தைகளோ பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
MGRக்கும் ஜெயலலிதாவுக்கும் திராவிடக் கொள்கைகளில் ஆழ்ந்த பிடிப்போ அறிவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், திராவிடர் கழகம் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்.
அதிமுக எத்தனை ஆண்டுகள் ஆண்டாலும் அவர்கள் என்ன விதமான அரசியலைச் செய்ய முடியும் என்பதைத் திமுக தான் தீர்மானிக்கிறது.
அது சமூக நீதி அரசியல்.
அதிமுக வலுவாக இருக்கிற வரை தான் திமுக இந்த அரசியலை முன்னெடுக்க முடியும்.
MGR இட ஒதுக்கீட்டில் கை வைத்தார். அதனால் தேர்தலில் தோற்ற பிறகு, ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீட்டையும் உயர்த்திக் கொடுத்தார்.
இதை ஒரு போதும் பாஜக செய்யாது. செல்லாக்காசு நடவடிக்கையில் நம்மை நடுத்தெருவில் நிறுத்தி விட்டு எல்லையில் ராணுவ வீரர்களைக் காட்டி பாடம் எடுத்தது போல், நமக்குத் தீமையும் செய்து விட்டு அதை நம்மையே நம்பவும் வைப்பார்கள்.
இன்றைய அதிமுகவுக்குத் தேவை ஒரு வலுவான தலைமை.
தற்போது அங்கு இயல்பான மக்கள் ஆதரவு பெற்ற தலைமை இல்லாததால், எப்படியும் மக்கள் தங்களை மீண்டும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்ற அவநம்பிக்கையில் தான் இவ்வளவு மோசமான ஆட்சியைத் தருகிறார்கள்.
அரசியல் என்பது ஆகச் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுப்பது இல்லை. வெல்லக்கூடிய முதல் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது. சித்தாந்தச் சுழல்களில் சிக்காமல் மிக அறிவார்ந்து இந்த முடிவை எடுப்பவர்கள் பாமர மக்களே. வெல்கிற கட்சிக்குத் தான் அவர்கள் வாக்கு அளிப்பார்கள். அப்போது தான் அவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை உள்ளூர் அரசியல்வாதிகளிடம் கேட்டுப் பெற முடியும்.
தேசிய அளவில் காங்கிரசு Vs பாஜக என்றால் காங்கிரஸ் தான் நம் தேர்வு.
காங்கிரசு Vs கம்யூனிஸ்ட் என்றால் மலையாளிகள் மாற்றி மாற்றி வாக்களிப்பார்கள்.
திமுக Vs அதிமுக என்றால் என்றும் திமுகவுக்குத் தான் நம் வாக்கு.
ஆனால், அதிமுக அழிந்து திமுக Vs பாஜக என்ற நிலை வருமானால்
இங்கு ஆட்டமே மாறி இருக்கும்.
அது CSKவா Real Madridஆ என்று கேட்பது போல் ஆகி விடும்.
திமுக தொலைக்காட்சி தருகிறேன் என்றால் அதிமுக கணினி தருகிறேன் என்று சொல்லும். நீ மிதி வண்டி தருகிறாயா நான் வாசிங் மெசின் தருகிறேன் என்று சொல்லும். நீ கல்லூரிகளைத் திறக்கிறாயா நான் நுழைவுத் தேர்வையே ரத்து செய்கிறேன் என்று சொல்லும். நீ 2 முட்டை போடுகிறாயா நான் 5 போடுகிறேன் என்று சொல்லும். நீ MBC இட ஒதுக்கீடு தருகிறாயா நான் 69% இட ஒதுக்கீட்டை அரசியல் சாசனத்தில் வைத்துப் பெயர் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லும்.
இது மிகவும் ஆரோக்கியமான அரசியல் போட்டி. இந்தப் போட்டியில் யார் வென்றாலும் மக்களுக்கு நன்மை தான்.
பாஜக இதில் எதையுமே தராது.
விநாயகர் ஊர்வலம் நடத்தி இசுலாமியர்களைத் தாக்கி வாக்கு கேட்பான்.
சாதிக் கட்சிகள் குடிசையைக் கொளுத்தி காதலிப்பவர்களைக் கொன்று வாக்கு கேட்கும்.
திமுகவோ அதிமுகவோ இல்லாத இடத்தில் காங்கிரசோ கம்யூனிஸ்டோ வந்தால் கூட அவர்கள் மாநிலத்தின் நலனுக்கு முழுமையாக கவனம் செலுத்துவார்கள் என்று சொல்ல முடியாது.
கட்சியின் தேசியத் தலைமைக்குக் கட்டுப்பட்டே இருப்பார்கள்.
அதனால் தான் இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைக் காங்கிரசு அரசால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
இந்தியாவிலேயே தேசியக் கட்சிகள் வெல்லவே முடியாத ஒரே மாநிலம் தமிழகம்.
இது, கிட்டதட்ட இந்தியாவில் இருந்து பாதி விடுதலை பெற்றதற்குச் சமம்.
திமுகவின் தலைமையைப் பிடிக்கவில்லை என்றோ உள்ளூர் அரசியல்வாதிகள் பிடிக்கவில்லை என்றோ அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் அதிகாரம், அரசியல் வளர்ச்சியைத் தேடி அடுத்த கட்சிக்குச் செல்வார்கள். மக்களும் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள். இது அதிகாரம் பரவும் இயல்பு. அதிகாரத்தை என்றும் குவித்து வைக்க முடியாது. ஆனால், இந்த அதிகாரப் பரவலும் திராவிடப் பின்னணி கொண்ட கட்சிக்குச் சென்றால் தான் தமிழ்நாட்டுக்குப் பாதுகாப்பு.
திமுக தான் திராவிடத்தின் ஆணி வேர். அதை மண்ணுக்குள் மறைப்பதற்காக அதிமுகவை வளர்த்து விடுவார்கள்.
அதே வேளை, அந்த வேரைப் பட்டுப் போகச் செய்ய அதே அதிமுகவின் அடியில் ஆசிட் ஊற்றவும் தயங்க மாட்டார்கள்.
இதை எல்லாம் சொன்னால்,
“பார்த்தாயா, திமுகவும் அதிமுகவும் ஒன்னு. இவர்கள் கூட்டுக் களவாணிகள். ஊழல் பணத்தைப் பிரித்துக் கொள்ளும் பங்காளிகள்”
என்று கிளம்பி விருவார்கள்.
அதிமுக திராவிடக் கட்சியே இல்லை என்று திராவிடம் பேசுகிற மூத்தவர்கள் சிலர் சொல்வர். அதன் அடிப்படை வேறு.
ஆனால், திராவிடத்தின் எதிரிகள்
திராவிடர் கழகம் அதிமுகவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்று திமுக காரர்களிடம் வற்றி வைப்பதும்
அதிமுக திராவிடக் கட்சியே இல்லை என்று திராவிடத்திடம் இருந்து தனிமைப்படுத்துவதும்
அதிமுகவை ஊடுருவிக் கைப்பற்றி மொத்தமாக திராவிடத்துக்கு வேட்டுவைக்கும் தந்திரமே.
தமிழகத்தின் இரு முனைப் போட்டி என்பது எப்போதும் இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையே மட்டும் இருப்பதாகப் பார்த்துக் கொள்வதே நம்மை மதவாத, சாதியவாத, இனவாத, தேசியவாத சக்திகளிடம் இருந்து காக்கும் என்பது தான் கடந்த 50 ஆண்டு அரசியல் சொல்லும் செய்தி.
வீழ்வது நாமாக இருப்பினும் ஆள்வது திராவிடமாக இருக்கட்டும்!
பார்க்க… முகநூல் உரையாடல்